நாகை மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பிலும், புதிய பேருந்து நிலையம் மற்றும் நாகூர் சம்பா தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் திரு உருவ சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர். இதே போல் நாகை ECRல் உள்ள அதிமுக அலுவலகத்தில் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான ஓ.எஸ்.மணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் படத்திற்கு ஓ.எஸ்.மணியன் மலர் தூவி மரியாதை செலுத்திய பின்பு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கரும்பு ஆலைகள் அதிக நிலுவைத் தொகை வைத்துள்ள நிலையில் அரசு கொள்முதல் செய்யும் என நினைத்து கரும்பு விளைவித்த விவசாயிகளின் நம்பிக்கையை திமுக அரசு அழித்துவிட்டதாகவும், மீண்டும் கரும்பு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற அவர், பொங்கல் விழாவிற்கு முடிந்தால் ஒன்றுக்கு இரண்டு கரும்பாக கொடுக்க வேண்டுமே தவிர கொடுத்ததை நிறுத்தி இருப்பது தவறான செயல் என விமர்சனம் செய்தார். பொங்கல் தொகுப்பிற்கு பொதுமக்கள் குறை கூறுவதால் தான் கரும்பு நிறுத்தப்பட்டதாக அமைச்சர் எ.வ.வேலு கூறியிருப்பது குறித்து கேட்ட பொழுது, திமுக ஆட்சியையும் குறை சொல்கிறார்கள் அவர்கள் இன்றே ராஜினாமா செய்து விட்டு சென்று விடுவார்களா? என முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் கேள்வி எழுப்பினார்