தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் திமுக நகராட்சித் தலைவரை கண்டித்து திமுக, விசிக உறுப்பினர்கள் 7 பேர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சிக் கூட்டம் தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் சௌந்தரராஜன் முன்னிலை வகித்தார்.

இதில் உறுப்பினர் ஜவஹர் பாபு பேசுகையில், கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. எனவே கூடுதல் நேரம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மின் விளக்கு வசதி மோசமாக உள்ளது. போதிய மின் பணியாளர்கள் இல்லாத நிலை உள்ளது. மண்சாலையை தார்ச்சாலையாக மாற்றித் தர வேண்டும். வரி செலுத்தாதவர்கள் பெயர்ப் பட்டியலை விளம்பரத் தட்டியாக வைத்து அவமானப்படுத்தும் போக்கை கைவிட வேண்டும்" என்றார்.

இதற்கு பதில் அளித்த ஆணையர்," இது குறித்து ஆட்சேபங்கள் வந்ததால் தற்போது அவ்வாறு செய்யப்படுவதில்லை" என்றார்.  

உறுப்பினர் பிரியா பேசுகையில்," சுமூகமாகவே கூட்டம் நடைபெறுவதில்லை. எனது வார்டில் எந்தப் பணியும் நடக்கவில்லை. வேண்டியவர்களுக்கு மட்டும் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது" என்றார்.

உறுப்பினர் சதாசிவகுமார் பேசுகையில், துப்புரவு பணி அவுட் சோர்சிங் முறையில் விடப்படுகிறது. அவர்களுக்கு அரசு நிர்ணயித்த சம்பளம் வழங்கப்படுவதில்லை. பதவி ஏற்று ஓராண்டு ஆகிவிட்டது. பொதுமக்களை சந்திக்க முடியவில்லை. நகராட்சித் தலைவரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் செய்கிறேன்" எனக் கூறி தலைவர் இருக்கை முன்பு அமர்ந்தார்.

உறுப்பினர் நாடிமுத்து பேசுகையில்," பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் இடம் சம்பந்தமாக நகராட்சி தீர்மானத்தை, நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதில் என்ன மேல் நடவடிக்கை எடுத்தீர்கள். ரேஷன் கடைகளில் 20 கிலோ அரிசி மாநில அரசு தருவதில்லை ஏன். அனைத்து உறுப்பினர்களுக்கும் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என்றார்.

இதற்கு பதில் அளித்த ஆணையர், " பாலிடெக்னிக் இடம் தொடர்பாக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.  

உறுப்பினர் கோமதி பேசுகையில், " கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. விஷக்காய்ச்சல் பரவி வருகிறது. எனது வார்டில் தனி நபர் ஒருவர் சாக்கடையை அடைத்து வைப்பதால் பிரச்சனை ஏற்படுகிறது. பணிகள் நடக்காதது குறித்து ஒப்பந்ததாரரால் பிரச்சனை என்றீர்கள். ஒப்பந்ததாரரை மாற்றியும் பணி நடக்கவில்லை" என்றார்.

உறுப்பினர் மகாலட்சுமி பேசுகையில், "எனது வாழ்வில் ஒதுக்கப்பட்ட பணிகள் நடக்கவில்லை. துப்புரவு பணியாளர்களின் சம்பளத்தில் முறைகேடு நடக்கிறது. பிறப்புச் சான்றிதழில் கூடுதல் வசூல் செய்யப்படுகிறது" என்றார்

அப்போது குறுக்கிட்டு பேசிய நகராட்சித் தலைவர், "உங்கள் வார்டிலேயே சிலர் பணி செய்ய விடாமல் தடுக்கின்றனர். அவர்களிடம் சென்று கேளுங்கள்" என்றார்.

" யார் எனச்சொல்லுங்கள்" என மகாலட்சுமி கேட்க, பதிலுக்கு தலைவர் சண்முகப்பிரியா, "உங்க சார்ட்ட (கணவர்) கேளுங்க என்று பதிலடி கொடுத்தார்.

உறுப்பினர் தேன்மொழி பேசுகையில், "திரௌபதி அம்மன் கோயில் சாலை சேதமடைந்துள்ளது. சாக்கடை தூர்வாரும் பணி சரியாக நடக்கவில்லை" என்றார்

இதனைத் தொடர்ந்து விசிக உறுப்பினர் சதாசிவகுமார் திமுக உறுப்பினர்கள் குமார், பிரியா, மகாலட்சுமி, ராமலிங்கம், சாந்தி,  கோமதி ஆகிய 7 பேரும் நகராட்சித் தலைவரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்துகிறோம்" என தலைவர் இருக்கை முன்பு அமர்ந்தனர். இந்நிலையில் கூட்டம் முடிந்தது என சொல்லிவிட்டு தலைவர் சண்முகப்பிரியா திடீரென வெளியேறினார். திமுக நகர மன்றத் தலைவரை கண்டித்து திமுக உறுப்பினர்களே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.