தஞ்சாவூர்: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து தஞ்சையில் வரும் 11-ம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க தி.மு.க. கூட்டணி கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படுவதற்கு தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கைவிடக்கோரி இந்த கூட்டணி சார்பில் வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தை தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் பெரிய அளவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தி.மு.க. சார்பில் முக்கிய நகரங்களில் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
அந்த வகையில் தஞ்சை மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்எல்ஏவுமான துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எம்எல்ஏ., டி.கே.ஜி.நீலமேகம், சதயவிழா குழு தலைவர் து.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து வரும் 11-ம் தேதி தஞ்சையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் திராளாக பங்கேற்பது குறித்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் பேசினர்.
கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் மனோகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முத்துஉத்ராபதி, ம.தி.மு.க. மாநகர செயலாளர் வீரசிங்கம், விடுதலைசிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெயினுலாபுதீன் மற்றும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வை தொடங்கியுள்ளது. வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள 16 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மேம்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். அக்டோபர் 28 முதல் டிசம்பர் 15 வரை நடைபெறும் இந்த சீராய்வு பணிகள், அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.
வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை நீக்கி, தகுதியான புதிய வாக்காளர்களை சேர்ப்பது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடந்த இருபது ஆண்டுகளில் மக்கள் வேலை, கல்வி உள்ளிட்ட காரணங்களால் இடம் மாற்றம் செய்ததால் ஒரே நபர் பெயர் பல தொகுதிகளில் இடம்பெற்றிருக்கும் வாய்ப்பு உள்ளது. அதேவேளை, இறந்த வாக்காளர்கள் பெயர்கள் தொடர்ந்தும் பட்டியலில் இருந்து வருவது, போலி வாக்குகள் இடப்படும் சூழலை உருவாக்கக்கூடும் என்று ஆணையம் வாதிடுகிறது. இதனால் இந்த சிறப்பு சீராய்வு முக்கியமான சீர்திருத்த நடவடிக்கையாக கருதப்படுகிறது.
இங்கு சர்ச்சை உருவானது இந்த அடையாள ஆவண சான்றுகள் சார்ந்த அம்சத்தில்தான். மக்கள் பெரும்பாலானோர் வைத்திருக்கும் ஆவணங்கள் ஏற்கப்படாமல், சிலரால் வழங்க முடியாத ஆவணங்கள் மட்டும் ஏற்கப்படுவதால், தகுதியான வாக்காளர்கள் கூட நீக்கப்படக்கூடும் என்ற அரசியல் கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளன.