நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கியது. எனினும் தஞ்சாவூர் மாநகராட்சியில் ஜனவரி 28ஆம் தேதி யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. 29 ஆம் தேதி 2 பேரும், 31ஆம் தேதி 3 பேரும், பிப்ரவரி 1ஆம் தேதி 10 பேரும், 2 ஆம் தேதி 54 பேரும், 3ஆம் தேதி 167 பேரும், 4ஆம் தேதி 155 பேரும் என மொத்தம் 391 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில், 27ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் தங்கம்மாள், காங்கிரஸ் வேட்பாளர் ராணி பத்மநாபன் ஆகிய இருவரது வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
மேலும், 16ஆவது வார்டில் அதிமுக பகுதிச் செயலாளர் வி. புண்ணியமூர்த்தி, 19ஆவது வார்டில் பாஜகவின் முரளிதரன், 20ஆவது வார்டில் திமுகவின் சாதிக் பாட்ஷா, 31ஆவது வார்டில் அதிமுக பகுதிச் செயலாளர் எஸ். ரமேஷ் உள்ளிட்டோரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 383 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
அதேபோல்,தேர்தலில் கும்பகோணம் மாநகராட்சியில் 397 மனுக்கள் ஏற்கப்பட்டன. கும்பகோணம் மாநகராட்சியில் ஜனவரி 28, 29, பிப்ரவரி 1 ஆம் தேதிகளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதற்கிடையே ஜனவரி 31 ஆம் தேதி ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அதனையடுத்து ஜனவரி 2 ஆம் தேதி 6 பேரும், 3 ஆம் தேதி 197 பேரும், 4 ஆம் தேதி 239 பேரும் என மொத்தம் 445 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில், 48 பேரின் மனுக்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து 397 மனுக்கள் ஏற்கப்பட்டன.
அதிமுகவில் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அதிகாரிகள் கூறினர். மேலும், திமுக, அதிமுக, பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்