தஞ்சாவூர்: தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி கும்பகோணம் கடைவீதியில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. எனவே பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி வருகிறது. இதையடுத்து புத்தாடைகள் வாங்க மக்கள் ஜவுளி கடைகளுக்கு படையெடுக்க துவங்கி விட்டனர். குறிப்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் தஞ்சாவூர் மாநகரில் துணி கடைகளில் மக்கள் கூட்டத்தால் தஞ்சாவூர் மாநகர் ஸ்தம்பித்தது. பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக ஜவுளி கடைகளுக்கு வந்து புத்தாடைகளை வாங்கி சென்றனர். துணிக்கடைகள், சாலையோர தரைக்கடைகளிலும் பொது மக்கள் கூட்டம் அலைமோதியது. தஞ்சையை சுற்றியுள்ள 100க்கும் அதிகமான கிராமங்களுக்கு தஞ்சாவூரின் பிரதான கடைவீதி என்பதால் மக்கள் தினமும் தஞ்சாவூர் நோக்கி வந்து செல்கின்றனர்.
தீபாவளி நெருங்க நெருங்க மக்கள் கூட்டம் அதிகளவில் வருவதால் தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகள், காந்திஜி ரோடு, தெற்குவீதி, கீழராஜ வீதி, கீழவாசல், புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது. கும்பேஸ்வரர் கோவில் முதல் பழைய மீன் மார்க்கெட் வரை செல்லும் சாலை மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. சாலையோரத்தில் தடைக்கடைகள், தற்காலிக கடைகளை வியாபாரிகள் அமைத்துள்ளனர். தஞ்சையில் இருந்து வரக்கூடிய கார், பஸ்கள், ஆட்டோக்கள் என அனைத்து வானங்களும் தஞ்சை சாலையில் வந்து சென்றன. இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேபோல் கும்பகோணத்திலும் பெரிய கடைகளுக்கு வருபவர்களுக்கு வாகன பார்க்கிங் உண்டு. ஆனால் சாலையோர கடைகளுக்கு பார்க்கிங் இல்லாததால் அவர்கள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் அந்த வழியாக குறுகிய தூரத்தை கடக்க நீண்ட நேரம் ஆகிவந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வந்தனர். இதற்காக காவல் உதவி மையம் திறக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு பேசுகையில், தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் கடந்த ஆண்டு இருந்த சிக்கல்களை ஆய்வு செய்து இந்த ஆண்டு சரி செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தை சுற்றியுள்ள 4 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்க கும்பகோணத்திற்கு வருவார்கள். கூட்டத்தை கட்டுப்படுத்த, போக்குவரத்து சரிசெய்தல் மற்றும் குற்றங்களை தடுப்பது உள்ளிட்டவற்றை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றத்தை பொருத்தவரை தஞ்சையில் இருந்து வரும் வாகனங்கள் கரும்பாயிரம் பிள்ளையார் கோவில் வழியாக நால்ரோடு சென்று அங்கிருந்து புதிய பஸ் நிலையம் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பஸ் நிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலை, நால்ரோடு, செட்டிமண்டபம் வழியாக பைபாஸ் சென்று தஞ்சை செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. செல்வம் தியேட்டர் பகுதியில் இருந்து மொட்டை கோபுரம் வரை அமைக்கப்பட்டுள்ள கடைகள், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருசக்கரவாகனங்களில் வருபவர்களால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க 50 இடங்களில் 150-க்கும் மேற்பட்ட இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக போலீசார், என்.எஸ்.எஸ், என்.சி.சி. பெண் காவலர்கள் சாதாரண உடையில் மொட்டை கோபுரம் முதல் செல்வம் தியேட்டர்வரை ரோந்து பணியில் இருப்பார்கள். 10 மோட்டார் சைக்கிள் ரோந்து வாகனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இருச்சக்கர வானங்களில் வருபவர்களுக்கு நகர மேல்நிலைப்பள்ளி, எஸ்.இ.டி. மகால், அல் அமீன் பள்ளி மைதான் ஆகிய இடங்களில் பார்க்ங்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த இடங்களில் இடவசதி முடிந்த பின்னர் சாஸ்த்ரா கல்லூரி, மகாமகம் குளத்தின் கரையில் வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடைவீதியில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. 8 மேற்பட்ட இடங்களில் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டுள்ளது. 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடந்த வாரம் வரை 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் குறித்து ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்யப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க 8 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 18 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பாக கொண்டாட பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.