நெல்லையில் பள்ளிக்கூட கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியாகினர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பல்வேறு தரமற்ற பள்ளிகள் இடிக்கப்பட்டு வருகின்றனர் மேலும் பள்ளி கட்டிடங்களின் உறுதித்தன்மையை ஆராய ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி குழு அமைத்து, முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, உதவி பெறும், தனியார் மற்றும் மெட்ரிக் உள்ளிட்ட அவைத்து வகை பள்ளிக்கூடங்களின் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளி கட்டிடங்கள் பழுதடைந்து இருந்தால், உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.

 



 

அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், தங்களது பள்ளி கட்டிடத்தின் தன்மை குறித்து அறிக்கை தயார் செய்து அனுப்பி மாவட்ட நிர்வாகத்திற்க்கு வருகின்றனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் 8 அரசு உதவி பெறும் பள்ளி கட்டிடங்கள் உள்பட மொத்தம் 528 பள்ளிக்கூடங்களில் உள்ள 889 வகுப்பறை கட்டிடங்கள் மிகவும் சேதமடைந்து காணப்பட்டு வருவதாகவும், அதனை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கும் படியும், மாவட்ட ஆட்சியருக்கும், முதன்மை கல்வி அலுவலருக்கும் கடிதம் அனுப்பி உள்ளனர். இவற்றில் 62 கழிவறை கட்டிடங்களும், 26 ஆய்வக கட்டிடமும் சேதமடைந்து உள்ளன எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

 



 

இதில் பெரும்பாலான கட்டிடங்களில் கான்கிரீட் உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் பழுது நீக்கம் செய்து திரும்பவும் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது. இதனால் அந்த கட்டிடங்கள் விரைவில் படிப்படியாக இடித்து அகற்றப்படும். மேலும் அந்த கட்டிடங்களில் சேகரிக்கப்படும் தளவாட பொருட்களை ஏலம் விடவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் கட்டி முடிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலான கட்டிடங்கள் முதற்கட்டமாக இடித்து அகற்றப்பட உள்ளது மேலும் அதனை தொடர்ந்து பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் விரைந்து இடிக்கப்படும். மேலும் இதற்கான ஏற்பாடுகளில் கடலூர் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது, என ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தெரிவித்து உள்ளார்.

 



 

இந்நிலையில் முன்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில் அருகே நாட்டார்மங்கலம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் மேற்கூறையும், குறிஞ்சிப்பாடி அடுத்த ஆயிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் மேற்கூரையும் அடுத்தடுத்து பெயர்ந்து விழுந்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.