கடந்த 2004 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 16 ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெற்ற பள்ளி தீவிபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தன. அப்போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா, அனைத்து பள்ளிகளின் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். இதே போல் நெல்லையில் உள்ள பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று குழந்தைகள் பலியான பிறகு, பள்ளிகளை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் சேதமான பள்ளி கட்டிடங்கள் கண்டறியப்பட்டு அதனை இடிக்கும் பணி தொடங்கியது. தஞ்சாவூர் மாவட்டத்தில் சேதமான பள்ளி கட்டிடங்கள் கைவிடப்பட்ட நிலையில், அந்த கட்டிடங்கள் இடிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் திருநெல்வேலியில் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் பலியான சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயன்படாமல், கைவிடப்பட்ட கட்டிடங்களை பாதுகாப்பாக இடிக்க வேண்டும் என தமிழகஅரசு உத்தரவிட்டது. அதன் படி தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகம் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் 19 பள்ளி கட்டிடங்கள், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 14 பள்ளி கட்டிடங்கள், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 14 கல்வி கட்டிடங்கள் என மொத்தம் 49 பள்ளிகளில் உள்ள கழிவறைகள், சமையலறை கூடம், பள்ளி கட்டிடம் என சேதமடைந்த 96 கட்டிடங்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்டறியப்பட்டது.
இந்த கட்டிடங்களை ஒரு வார காலத்துக்குள் இடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதை அடுத்து சேதமடைந்த கட்டிடங்கள் இடிக்கும்பணி தொடங்கியது.அதன்படி பாபநாசம் அருகே தாளக்குடி ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் பழமையான ஓட்டுக் கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கப்பட்டது. இதே போல் மாவட்டத்தில் உள்ள கணக்கெடுப்பு நடத்தப்பட்ட கட்டிடங்கள் அந்தந்தப் பகுதியில், பாதுகாப்பாக இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகினறது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தஞ்சை மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் கூடுதல் வகுப்பறைகள் இல்லாமல் அரசு பள்ளிகள் நெருக்கடியான இடங்களிலும், கிராமப்புறங்களில் ஊராட்சிக்கு சொந்தமான கிராம சேவை மையங்கள், கோயில், மண்டபங்கள் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. சேதமான கட்டிடங்களை இடித்து அகற்றியதும், உடனடியாக அந்த இடத்தில் புதிய கட்டிடங்களை கட்டித் தர வேண்டும். தற்போதுள்ள பெரும்பாலான பள்ளிகளில் வெளிபுறத்தில் வர்ணம் பூசப்பட்டு தரமான கட்டிடம் போல் காட்சியளிக்கின்றது. மேலும் பெரும்பாலான கிராமங்களில் உள்ள பள்ளிகளில் சுகாதார வளாகத்திற்கு செல்லும் பாதைகள் பள்ளமாக இருப்பதால், மழை காலங்களில் மாணவர்கள் இயற்கை உபாதைகள் செல்ல முடியாமல் தவித்து விடுகின்றனர்.
இதே போல் கழிவறைகளின் சுற்று சுவர் சாய்ந்து எப்போது விழுமோ என்ற நிலையில் உள்ளது. ஆய்வு குழுவினர், தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் வகுப்பறைக்குள் சென்ற கட்டிடத்தை தன்மையை சோதனை செய்து, தரமற்ற வகையில் இருந்தால், உடனடியாக இடிப்பதற்கு உத்தரவிட வேண்டும். தமிழக அரசு, ஒவ்வொரு கல்வியாண்டு தொடங்குவதற்கு முன், அனைத்து பள்ளிகளிலும், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்தால், இது போன்ற சம்பவம் நடைபெறாது என்றனர்.