தஞ்சை மாநகரில், புதுப்பட்டினம் கிராம வருவாய் நிர்வாகத்திற்குட்பட்ட மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள காந்திஜி சாலையில் 60 அடி அகலமுள்ள ராணிவாய்க்கால் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள், வணிக நிறுவனங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் அந்த வாய்க்காலே தெரியாத அளவுக்கு உள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை எந்தவித தயவுமின்றி அகற்ற வேண்டும் என பல்வேறு கட்சியினர், சமூக நல அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மேலும் இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றது.


இந்தநிலையில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றி, நீர்நிலைகளை மீட்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து ராணி வாய்க்காலை, பல ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்து, அதில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்ற முடிவு செய்தனர். இந்த தகவலை வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகள், ஓட்டல், மாடி வீடு, கூரை வீடு, ஓட்டுவீடு என 23 கட்டிடங்களின் உரிமையாளர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து அந்தந்த கட்டிடங்களின் உரிமையாளர்கள், தாங்களே பொருட்களை எடுத்து கொண்டு காலி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.




மேலும் ராணிவாய்க்காலை மீட்கும் முயற்சியாக, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன் மற்றும் அலுவலர்கள் மேற்பார்வையில் கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடங்கியது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 23 கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. காந்திஜி சாலை இர்வீன் பாலம் அருகே 60 அடி அகலமாக தொடங்கும் இந்த வாய்க்கால் ஆபிரகாம் பண்டிதர் சாலையில் 40 அடி வாய்க்காலாக முடிவடைகிறது. இந்த வாய்க்கால் வழியாக அழகி குளத்திற்கும், பனகல் கட்டிடம் பகுதியில் உள்ள அகழிக்கும் தண்ணீர் சென்றுள்ளது. தற்போது ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு, ஸ்மார் சிட்டி திட்டத்தின் கீழ் வாய்க்கால் சீரமைக்கப்பட உள்ளது. மேலும் தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வாய்க்கால்களை மீட்கப்பட்டு, அதிலுள்ள ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்படும் என்றனர்.




தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி வழக்கறிஞர் ஜீவக்குமார் கூறுகையில், பல ஆண்டுகளுக்கு பிறகு காணாமல் போன ராணி வாய்க்காலை மீட்டுள்ளத மகிழ்ச்சி அளிக்கிறது. ராணி வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்.  ராணி வாய்க்கால் உள்ளிட்ட தற்போது மீட்கப்பட்டுள்ள வாய்க்கால்களில் இனி வரும் காலத்தில் ஆக்கிரமிப்புகள் செய்யாத வகையில் பணிகளை செய்ய வேண்டும். மீறி ஆக்கிரமிப்புகள் செய்தால், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளியக்கிரஹாரம், கரந்தை, கொடிமரத்துமூலை, வடக்குவாசல், தேரோடும் நான்கு வீதிகள், அகழி உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும். கடந்த காலங்களில் ராணி வாய்க்கால் இருக்கும் சுவடே இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது வந்துள்ள ஆணையர் சரவணகுமார், காணாமல் போன ராணி வாய்க்காலை பல ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்து, வாய்க்காலை சீர்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதற்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றோம் என்றார்.