திருவாரூர் மாவட்டம் நீலகுடி கிராமத்தில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று மத்திய பல்கலைக்கழகத்தில் 6வது பட்டமளிப்பு விழா காணொலிக் காட்சி  வாயிலாக நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டத்தை வழங்கினார். மேலும் மத்திய பாதுகாப்பு துறை ஆலோசகர் சதீஷ் ரெட்டி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக டீன் வேல்முருகன் உள்ளிட்ட ஏராளமான பேராசிரியர்கள் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர். பட்டமளிப்பு விழாவிற்கு பின்னர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது...



கொரோனா காரணமாக தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி வகுப்புகள் வருகிற 20-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. குறிப்பாக இளங்கலை மூன்றாம் ஆண்டு மற்றும் முதுகலை இறுதியாண்டு பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மட்டும் முதலாவதாக வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. ஒரே நேரத்தில் அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு வர அனுமதிக்க முடியாது என்ற காரணத்தினால் முதலில் இரண்டு பிரிவு மாணவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகத்திற்கு வரக்கூடிய மாணவ மாணவிகள் அனைவரும் கட்டாயம் 2 தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் மேலும் அதற்கான சான்றிதழ்களை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறினார். தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் 2500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களில் தமிழ்நாட்டை விட அதிக அளவில் வெளி மாநிலங்களில் இருந்து தான் கல்வி பயில வருகிறார்கள், நம் மாநிலத்தில் இருந்து வந்து கல்வி பயில்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. மத்திய பல்கலைக்கழகம் ஆரம்பித்தது கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் இங்கு வந்து படிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் தொடங்கப்பட்டது. மேலும் இன்றைய பட்டமளிப்பு விழாவில் 754 மாணவிகளுக்கும் 810 மாணவர்கள் உட்பட 1596 மாணவ மாணவிகளுக்கு இன்று பட்டம் வழங்கப்பட்டது.

 

புதிய பாடப்பிரிவுகள் கொண்டுவர முயற்சி செய்து கொண்டுள்ளேன். கடந்த வாரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நான் சந்தித்தேன். அப்பொழுது மத்திய பல்கலைக் கழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசின் சார்பில் செய்து தருவேன் என கூறியுள்ளார். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக துணை கல்வி வளாகம் திருச்சியில் அமைக்க இடம் தருவதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். திருச்சியில் 25 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழக துணை கல்வி வளாகம் கொண்டுவரப்படவுள்ளது. அதிக அளவில் மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய பல்கலைகழகத்திற்கு ஆன நிதி பற்றாக்குறை என்பது இல்லை. பல்கலைக்கழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு தொடர்ந்து கொடுத்துக் கொண்டு வருகிறது. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் விரைவில் விளையாட்டுக்கு என தனி துறை கொண்டுவரப்பட உள்ளது இதுகுறித்து பாரத பிரதமரும் விருப்பம் தெரிவித்துள்ளார் விரைவில் விளையாட்டுத்துறை பிரிவு தொடங்கப்படும் என மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.