டெல்லியில் 21 வயதான பெண் போலீஸ் மார்பகங்கள் அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருந்தார். உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல், குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து, உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், போலீஸ் அதிகாரிக்கு நீதி வேண்டும் என பல்வேறு அமைப்பினர் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் பெண் போலீஸ் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கண்டித்து தஞ்சை ரயிலடியில், பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெல்லி பாதுகாவல் பிரிவில் பணிபுரிந்த இளம் பெண் காவலர் படுகொலையில் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சுதந்திரமான விசாரணை நடத்த மத்திய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது.
இந்த படுகொலைக்கு நீதிமன்ற கண்காணிப்பில் குழு அமைத்து சுதந்திரமான விசாரணையை நேர்மையான முறையில் நடத்தவேண்டும், குற்றவாளிகள் எக்காரணம் கொண்டும் தப்ப விடக் கூடாது, சபியாவை படுகொலை செய்தவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும், இவரின் படுகொலைக்கு டெல்லி காவல் துறையை பொறுப்பில் வைத்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பேற்க வேண்டும், நாட்டில் பல்வேறு துறைகளில் ஆண்களுக்கு நிகராக அதைவிட கூடுதலாக கல்வி, நீதித்துறை, ராணுவம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. .வீட்டில் இருக்கும் பெண்கள் உள்ளிட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் வரை ஏதாவது ஒருவகையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். வன்புணர்வு படுகொலைகள் தற்போது அதிகமாக நடைபெறுகின்றது. இவற்றை தடுத்து நிறுத்தி பாதுகாக்க வேண்டிய மத்திய மோடி அரசு வேடிக்கை பார்ப்பது மூலம் குற்றங்களை ஊக்குவிக்கின்றது.
பெண்களை பாதுகாக்க சட்டம் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும், கண்காணிக்கப்பட வேண்டும். பெண்கள் விழிப்புணர்வு அவரவர் பகுதிகளில் நடத்தப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களிடப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் காளியப்பன் தலைமை வகித்தார். இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரைமதிவாணன் மக்கள் கலை இலக்கியக் கழக மாநகர செயலாளர் இராவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழர் தேசிய முன்னணியின் தேர்தல் பணிக் குழு உறுப்பினர் அய்யனாபுரம் சி.முருகேசன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தா. பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழனிராஜன் நன்றி கூறினார். இதில் பல்வேறு கட்சியினர் மற்றும் இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.