திருவாரூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கங்களின் மாநில பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் கொண்டு வந்த தமிழக முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கடந்து 2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்ட வேளாண் ஒப்பந்த சாகுபடி சட்டத்தை தற்பொழுது ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது. மேலும் புதிதாக வேளாண் வணிக ஒப்பந்த சட்டம் கொண்டுவர வேண்டும். தமிழ்நாட்டில் குறுவைக்கு பயிர் காப்பீடு திட்டத்தை நிறைவேற்ற தவறியதால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், அதேநேரத்தில் தற்போது சம்பா சாகுபடிக்கு பயிர் காப்பீடு திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பாதித்தால் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
சம்பா சாகுபடிக்கு தற்போது மேட்டூர் அணையில் 75 அடி தண்ணீர் இருப்பு உள்ள நிலையில், இதனைக் கொண்டு வடகிழக்கு பருவமழை துவங்கும் வரையிலும் சாகுபடியில் முழுமையாக மேற்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் 30 டிஎம்சி தண்ணீரை உடனே விடுவிக்க உத்தரவிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் நேரில் கர்நாடக தமிழக அணைகளையும் பாசன பகுதிகளையும் பார்வையிட்டு உரிய தண்ணீரை பெற்றுத் தர தமிழ்நாடு அரசு முயற்சிக்க வேண்டும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்வதில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. கடந்த 2020-21 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலும் சுமார் 32.50 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மார்ச் மாதத்திற்கு பிறகு இதுவரையிலும் 3.50 லட்சம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. தமிழகம் முழுவதும் உற்பத்தி செய்த நெல் கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய்க்கு விற்க வேண்டிய கொடுமை ஏற்பட்டுள்ளது இதற்கு தமிழ்நாடு அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். வெளிமாநில நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்படுவதாக கூறி கொள்முதலை நிறுத்துவதும் விவசாயிகள் தலையில் சுமத்த முயற்சிப்பது ஏற்கத்தக்கதல்ல. இந்த ஆண்டு 4.5 லட்சம் ஏக்கரில் டெல்டா மாவட்டங்களில் மட்டும் குறுவை அறுவடை பணிகள் துவங்க உள்ள நிலையில் கொள்முதல் விரைவுபடுத்தி தடையின்றி கொள்முதல் செய்வதை தமிழ்நாடு அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளிள் கடந்த ஆட்சியில் நடைபெற்ற கடன் வழங்குவதில் உள்ள ஊழல் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும், என்கிற பெயரில் உண்மையான விவசாயிகள் கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி கடன் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எனவே கடந்தகால நடைமுறைகளின் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் சான்று பெற்று கொன்று அதன் உண்மை தன்மையை உறுதி செய்து அதனடிப்படையில் கடன் வழங்குவதை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு அறநிலையத்துறை சார்பில் கொண்டுவரப்பட்டுள்ள கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்புக்கு எதிரான மசோதா வரவேற்கத்தக்கது.
அதே நேரத்தில் விவசாயிகள் கோவில் இடங்களில் சாகுபடி செய்பவர்கள் இந்த சட்டத்தால் பாதிக்கப் படுவார்கள் என்ற அச்சமும் கேள்வியும் ஏற்பட்டுள்ளது, ஆகையால் தமிழ்நாடு அரசு இதனை தெளிவுபடுத்த வேண்டும். மேலும் 2020-21 ஆம் ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை உடனே வழங்கிட மத்திய மாநில அரசுகளை தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில் இதுவரை பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. எனவே செப்டம்பர் 30 ஆம் தேதி திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கங்களின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.