மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தாண்டவன்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் தனிநபர் ஒருவர் புதிய வீட்டு மனை பிரிவு அமைத்து வருகிறார். இதற்காக அருகில் உள்ள பட்டியல் இன மக்கள் வசிக்கக்கூடிய அண்ணாநகர் பகுதியை ஒட்டிய இடத்தில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டால் அண்ணா நகர் பகுதி வெளியே தெரியாத நிலை ஏற்படும். 




எனவே பட்டியல் இனமக்களை பாதிக்கும் விதமாக கட்டப்படும் இந்த தீண்டாமை சுவரை உடனடியாக தடுத்து நிறுத்தவும், கட்டுமான பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தவும் வலியுறுத்தி அண்ணா நகர் பகுதி மக்கள் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தனியார் அமைக்கும் புதிய மனைபிரில் பாரபட்சம் இன்றி அனைத்து சமூகத்தினருக்கும் வீட்டு மனைகள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இதுவரை தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காத வருவாய்துறை மட்டும் காவல் துறையை கண்டித்தும் 100 க்கும் மேற்பட்டார் கலந்து கொண்டு கண்டன கோங்களை எழுப்பினர்.




சீர்காழியில் பறவைகளை வேட்டையாடியவர்கள் கைது. 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு!


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வனசரகத்திற்கு உட்பட்ட வயல்வெளிகள், சமவெளிப் பகுதிகளில் மடையான், கொக்கு பறவைகளை வேட்டையாட தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பறவை வேட்டையில் ஈடுபட்டும் நபர்களை பிடிக்க திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார். அவரின் உத்தரவின் பேரில் சீர்காழி வன சரக அலுவலர் ஜோசப் டேனியல் தலைமையில் தனி குழு அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 




அப்போது தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் புங்கையன் தோப்பு மாத்தூர் வயல்வெளி  பகுதியில் வலை வைத்து மடையான் பறவைகளை வேட்டையாடியவர்களை  வனத்துறையினர் கண்டறிந்து பிடித்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை செய்ததில் ஆக்கூர் புங்கையன் தோப்பு பகுதியை சேர்ந்த   செல்லக்கண்ணு என்பவரின் 40 வயதான மகன் சத்தியராஜ் மற்றும் மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாலையா என்பவரின் 37 வயதான மகன் சுரேஷ் என்பது தெரிய வந்தது. பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்த வனத்துறையினர் இருவருக்கும்  தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து பறவைகளை பிடிக்க பயன்படுத்திய வலைகள் மற்றும் அவர்கள் பிடித்து வைத்திருந்த பறவைகள் பறிமுதல் செய்தனர்.




மேலும் சீர்காழி வன சரக அலுவலர் ஜோசப் டேனியல் கூறுகையில்,  மடையான், கொக்கு, குயில், மயில், நாரைகள், கவுதாரி, உள்ளான் உள்ளிட்ட பறவைகள் மற்றும் உடும்பு, முயல், மான் போன்ற வன உயிரினங்களை வேட்டையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை மீறி, தடை செய்யப்பட்ட பறவைகள் அல்லது வன உயிரினங்களை வேட்டையாடுவோருக்கு இந்திய வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் எங்கேனும் பறவைகள் மற்றும் வன உயிரினங்கள் வேட்டையாடப்பட்டால் அதுகுறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.