இந்தியாவின் இரும்பு மனிதர் எனப் போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான இன்று தேசிய ஒற்றுமை தினமாக நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மயிலாடுதுறையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா- சாய்) ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்க மைதானத்திலிருந்து ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது. 




மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரமணிமாறன், சாய் விளையாட்டு அரங்க பொறுப்பாளர் தனலட்சுமி ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஒற்றுமை ஓட்டமானது, விளையாட்டு மைதானத்தில் தொடங்கி, மகாதானத் தெரு, பட்டமங்கலத் தெரு, கச்சேரி சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் துவங்கி இடத்திலேயே முடிவடைந்தது. இதில் சாய் விளையாட்டு அரங்க  மாணவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.




மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டையில் மின்கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்து சேதமடைந்த வீட்டினை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பார்வையிட்டு நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார். 


மயிலாடுதுறை ஒன்றியம் சோழம்பேட்டை ஊராட்சி வடபாதித்தெருவை சேர்ந்தவர் காளியப்பன்.  இவரது வீடு நேற்றிரவு மின்கசிவு காரணமாக நேரிட்ட தீவிபத்தில் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்த மயிலாடுதுறை தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்துசென்று தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த அனைத்துப் பொருள்கள் மற்றும் சான்றிதழ்கள் எரிந்து சேதமடைந்தது. 




இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜகுமார் சந்தித்து அரசின் நிவாரணத் தொகை மற்றும் உதவிப் பொருள்களை வழங்கி ஆறுதல் தெரிவித்தார். தீயணைப்பு வாகனம் உரிய நேரத்தில் வந்தடைந்தும், இப்பகுதியில் பல்வேறு இடங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் காரணமாக தீயணைப்பு வாகனம் உடனடியாக வீட்டின் அருகே செல்லமுடியாமல் போன காரணத்தால், வீடு முற்றிலும் தீக்கிரையானதாகவும், உடனடியாக இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.




தரங்கம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில்  நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் களைக்கொல்லி மருந்து அடிக்கும் பணியில் தீவிரம் காட்டியுள்ளனர்.


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் 18 ஆயிரம் ஏக்கர் வரை சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது பெரும்பாலான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். விவசாயப் பணிகளுக்கு வேலை ஆட்கள் பற்றாக்குறை இருப்பதாலும், இடு பொருள்களின் விலை உயர்வினாலும் நேரடி நெல் விதைப்பு முறையில் ஆர்வமுடன் சாகுபடி செய்கின்றனர். திருக்கடையூர், செம்பனார்கோவில், கழியப்பநல்லூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில்  ஈடுபட்டுள்ளனர்.




இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கவுள்ளதால் அதற்கு முன்பாக தங்கள் விளைநிலங்களின் முலைத்துள்ள களையினை அழிப்பதற்காக கை தெளிப்பான் உதவி கொண்டு களைக்கொல்லி மருந்து தெளித்தும் அடி உரங்கள் இடும் பணியிலும் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இது போன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதியும் விவசாயிகள் சம்பா சாகுபடியில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.