வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து புயலாக மாறும் என்றும், காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஒடிசா அருகே கடந்து செல்லும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இல்லை எனவும், பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஓரிரு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியிருந்தது.  




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நேற்று மாலை 6 மணியளவில் திடீரென  கருமேகத்துடன் பலத்த காற்று வீசியது. அதனைத் தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. இந்த காற்று, மழையால் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் குமரக்கோயில் தெருவில் தாமரைக்குளம் அருகே குடியிருப்புகள் பகுதியில் இருந்த சுமார் 100 ஆண்டு பழமையான அரசமரத்தின் மிகப்பெரிய பகுதி முறிந்து மரத்தின் அருகே இருந்த வீடுகளின் மேல் விழுந்தது. 




இதில் மரத்தின் கீழே இருந்த வீட்டில் வசித்த வாசுகி (45), கௌசல்யா (25), சுசிலா (60), துரை (40) ஆகியோரது குடிசை மற்றும் தகரவீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தது. இதில் வீட்டிலிருந்த கௌசல்யா அவரது குழந்தைகள் விஜய் (4), நிசாந்த் (3), சுசிலா ஆகிய நால்வரும் லேசான காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து வீடுகளின் மீது விழுந்த மரத்தினை இயந்திரம் மூலம் வெட்டி அகற்றினர். 




தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு உடனடியாக நேரில் சென்ற சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம்,  பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி இடிந்த வீடுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் சீர்காழி வட்டாசியர் சண்முகம், காவல் ஆய்வாளர் இராமமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மின்வாரியத்தினர் விரைந்து சென்று அப்பகுதியில் விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் மின் இணைப்புகளை துண்டித்து அறுத்து விழுந்த மின் கம்பிகளை அப்புறப்படுத்தி சரி செய்தனர்.






கடந்த சில தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் காற்று காரணமாக, மயிலாடுதுறை மன்னம்பந்தல், வடகரை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து சேதமானது. அதேபோன்று நேற்று பலத்த காற்றுடன் பெய்த மழையால் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் விழுந்து வீடுகள் சேதம் ஆன சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.