தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை அதிவேகமாக பரவிவந்த நிலையில், தமிழகம் முழுவதும் மே மாதம் முதல் முழு ஊரடங்கை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். அதனையடுத்து தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை நாளுக்கு நாள் தொற்றின் வேகம் அதிகரித்துவந்த நிலையில், தற்போது தொற்றின் வேகம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 261 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

திருவாரூர் மாவட்டம் முழுவதும் 2497 நபர்கள்  கொரோனா தொற்று ஏற்பட்டு அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்தமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 32 ஆயிரத்து 800 நபர்கள் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 32038 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் 579 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 

மேலும் மாவட்டம் முழுவதும் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மூன்று நபர்கள் இன்று மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் இதுவரை 265 நபர்கள் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசு மருத்துவமனையில் உள்ள 1059 படுக்கைகளில் 420 படுக்கைகளில் தொற்று ஏற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதேபோன்று தனியார் மருத்துவமனைகளில் உள்ள 268 படுக்கைகளில் 130 படுக்கைகளில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கோவிட் கேர் மையத்தில் உள்ள 1105 படுக்கைகளில் 484 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதே போன்று அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கையில் 387 நபர்களும் அவசர சிகிச்சை பிரிவு ஆக்சிஜன் படுக்கையில் 119 நபர்களும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இதேபோன்று தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கையில் 48 நபர்களும், அவசர சிகிச்சை பிரிவில் உள்ள ஆக்சிஜன் படுக்கையில் 34 நபர்களும், சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கோவிட் கேர் மையத்தில் உள்ள ஆக்சிஜன் படுக்கையில் 6 நபர்கள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றின் வேகம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இந்த ஊரடங்கை பொதுமக்கள் யாரும் அலட்சியமாக பயன்படுத்தாமல் அனைவரும் வீட்டிலிருந்து தொற்று இல்லாத மாவட்டமாக திருவாரூர் மாவட்டத்தை உருவாக்க ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.