பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா
முன்னாள் அமைச்சர் சண்முகத்திற்கு எல்லாமே மர்மம்தான். அவர் மர்மமான ஆள். எந்த பக்கம் உள்ளார் என்பது எந்த காலத்திலும் தெரியாது
அமைச்சர் பொன்முடி பேட்டி
தஞ்சாவூர் அருகே வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் 29 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் பல்கலைக் கழக துணைவேந்தர் செ.வேலுசாமி வரவேற்றார். பல்கலைக் கழக வேந்தர் கி.வீரமணி தலைமை வகித்து பேசுகையில், கல்வியும், சுயமரியாதையும், பகுத்தறிவும் தான் தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும் என்பதற்கு ஏற்ப தற்போது பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு உயர்கல்வித்துறையின் வாயிலாக ஏராளமான திட்டங்கள் மூலமாக வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது தமிழக உயர்கல்வி துறையானது மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது. இப்பல்கலைக் கழகம் சார்பில் இவ்வாண்டு கல்வி உதவித்தொகையாக 1,877 மாணவர்களுக்கு பல்வேறு பிரிவின் கீழ் 1.5 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1,000 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். மேலும் 21 மாணவர்கள் முனைவர் பட்டமும், இவ்வாண்டில் தரவரிசையில் தகுதி பெற்ற 88 பேருக்கு தங்கப் பதக்கம், வெள்ளி பதக்கம், வெண்கல பதக்கங்கள் வழங்கி பேசுகையில்,சமூக அடிமைத்தனத்தில் இருந்து மகளிருக்கு விடுதலை பெற்றிட கல்வி பெறச்செய்வது தான் சரியான தீர்வாகும் என பெரியார் சிந்தித்தார். ஏனெனில் முன்பெல்லாம் சமூகத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டிருந்தது. அந்த அடிப்படைக் கோட்பாட்டில் பெண்கள் மேம்பாட்டுக்காக, உலகளாவிய அளவில் முதல் முதலாக மகளிருக்காகவே உருவாக்கப்பட்டது இந்த கல்வி நிறுவனம். இங்கு கல்வி பயின்ற முன்னாள் மாணவியர்கள் பலர் இன்று உலகில் பல நாடுகளில் சிறந்த நிறுவனங்களில் உயரிய முதன்மை பொறுப்புகளில் பணியாற்றுவதை நான் அறிவேன்.
பட்டம் பெறும் நீங்கள் எங்கு சென்றாலும் பெரியார் ஏந்திய பகுத்தறிவுச்சுடரை கொண்டு செல்லுங்கள், பகுத்தறிவு என்பது இன்றைக்கு இன்றியமையாத அடிப்படை ஒன்றாகும். பட்டம் பெறும் நீங்கள் உங்கள் வாழ்க்கையை செம்மையாக்குவதோடு,சமூக மேம்பாட்டுக்கும் கடமையாற்ற வேண்டும் என்றார். விழாவில் இணைவேந்தர் அ.ராஜசேகரன், ஆட்சிமன்றக்குழு உறப்பினர் வீ.அன்புராஜ், பதிவாளர் பி.கே.ஸ்ரீவித்யா உள்ளிட்ட பேராசிரியர்கள், பெற்றார்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்த அவர், கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ள ஒன்று. தமிழகத்தில் ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை, மாணவர்களுக்கு ஏற்ப அமைய வேண்டும் என்ற அடிப்படையில் கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகம் 51 சதவீத அளவிற்கு உயர்கல்வியில் வளர்ந்துள்ளது. ஆரம்ப கல்வி வளர்ச்சிக்கு காமராஜ் என்றால், உயர் கல்வி வளர்ச்சிக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி என்பதை யாரும் மறுக்க முடியாது. கருணாநிதி வழியில் தமிழகத்தில் பள்ளி மற்றும் உயர் கல்வி வளர்ச்சியடைய முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இரு மொழி கொள்கை என்பது புதிது அல்ல, அண்ணா காலத்தில் இருந்து தமிழகத்தில் உள்ள ஒன்று தான். தமிழகத்தில் இரு மொழி கொள்கை இருக்க வேண்டும். மூன்றாவது மொழியை மாணவர்கள் படிப்பதில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. அது விருப்ப பாடமாக இருக்க வேண்டும். அது கட்டாயப்பாடமாக இருக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். இதற்காக ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம். கல்வி துறை குறித்து ஆளுநர் விசாரித்து வருகிறார். அது வரும் காலங்களில் மாற வாய்ப்பு உள்ளது. முன்னாள் அமைச்சர் சண்முகத்திற்கு எல்லாமே மர்மம்தான். அவர் மர்மமான ஆள். எந்த பக்கம் உள்ளார் என்பது எந்த காலத்திலும் தெரியாது. ஆளுநர், தமிழக அரசுக்கும், அதன் கொள்கைளுக்கும் ஆதரவாக இருக்க வேண்டும். நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநரை முதல்வர் சந்தித்து மனு அளித்துள்ளார். வரும் காலங்களில் தமிழக அரசுக்கு ஆதரவாக ஆளுநர் இருப்பார் என்றார்.