தஞ்சை அருகே துலுக்கம்பட்டி பகுதிகளில் போலி மதுபானங்கள் தயாரிக்கப்படுவதாக,

  கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மாவட்ட காவல் கண்காணிபபாளர் ரவளிப்பிரியா உத்தரவின்பேரில், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீஸார், சோதனை நடத்தினர். அப்போது, ஊரின் ஒதுக்குப்புறமான பகுதியில் போலி மதுபான ஆலை இயங்கிவருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தனிப்படை போலீஸார் அந்த இடத்துக்குள் அதிரடியாக நுழைந்து, தப்பிக்க முயன்ற 6 பேரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் சம்பவ இடத்தை வல்லம் டிஎஸ்பி பிருந்தா நேரில் பார்வையிட்டு, தமிழ்ப் பல்கலைக் கழக போலீஸார், 6 பேரையும் கைது செய்யவும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிட்டார்.




இதுகுறித்து போலீஸார்  நடத்திய விசாரணையில், தஞ்சாவூர் பொட்டுவாச்சாடி வடக்கு தெருவைச் சேர்ந்த மெல்வின் சகாயராஜ் (41) என்பவர், துலுக்கம்பட்டியில் குமரேசன் என்பவருக்குச் சொந்தமான மேற்படி இடத்தை, மாத வாடகையாக ரூ.5 ஆயிரம் என வாய்மொழியாக ஒப்புக்கொண்டு வாடகைக்கு எடுத்து கடந்த 4 மாதங்களாக அங்கே போலி மதுபான ஆலை நடத்தி வந்துள்ளது தெரிய வந்தது. அதற்காக புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மதுபானம் தயாரிக்கத் தேவையான மூலப் பொருட்களை வாங்கி வந்து மதுபானங்கள் தயாரித்து, போலியாக நிறுவனங்களின் பெயர்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டி வெளியே கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்றுவந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.




மேலும், இப்போலி மதுபான ஆலையில் தஞ்சாவூர் விளார் சாலையைச் சேர்ந்த சே.அறிவழகன் (30), மாரியம்மன்கோயில் பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டியன் (33), திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கையைச் சேர்ந்த செ.முத்துக்குமார் (29), புதுச்சேரி மாநிலம் காரைக்காலை நேரு நகரைச் சேர்ந்த பாபு (எ) விஜயகுமார் (42), காரைக்கால் அருகேயுள்ள கோவில்பத்து திரவுபதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பழனியப்பன் (38) ஆகியோர் வேலைபார்த்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலி மதுபான ஆலையில் இருந்து 700 மதுபாட்டில்கள், 2,000 காலி மதுபாட்டில்கள், 2 மூட்டைகளில் மதுபாட்டில் மூடிகள், பிளாஸ்டிக் கேன்கள், மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள், கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்து, போலி மதுபான ஆலைக்கு சீல் வைத்தனர்.




போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள காரைக்கால் பாபு, காரைக்காலில் சில ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட  ராமுவின் அக கா மகன் ஆவார். பாபு மீது ஒரு கொலை வழக்கும், பல்வேறு மதுகடத்தல் வழக்குகளும் நிலுவையில் உள்ளது. திருக்கண்ணமங்கை முத்துக்குமார் மீது  மூன்று கொலை வழக்குகளும், பெல்வின் சகாயராஜ் மீது 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளும், மூன்று சிலை திருட்டு வழக்குகளும், அறிவழகன் மீது 2 கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் உள்ளது என போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.