முழு ஊரடங்கு காரணத்தால் பூச்சிமருந்து கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு. பருத்தி சாகுபடியில் பெரும் இழப்பு ஏற்படும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கவலை.

 

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் தமிழகத்திலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தளர்வுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸின் தாக்கம் குறையாத காரணத்தால் கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் தளர்வில்லாத முழு ஊரடங்கு தமிழக அரசு சார்பில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பால் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் தவிர அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

 

முழு ஊரடங்கில் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு விளக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியே. இதற்கு உதாரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கோடை கால பணப் பயிரான பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது பருத்தி செடிகளில் பூச்சி தாக்குதல் அதிகம் நிலவி வருகிறது. பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பூச்சி மருந்து தெளிக்க வேண்டியது அவசியம். ஆனால் பூச்சி மருந்து கடைகள் பெரும்பாலும் பூட்டியே உள்ளன. ஒரு சில கடைகள் மட்டும் தமிழக அரசின் அறிவுறுத்தல் படி காலை 6 மணி முதல் 9 மணி வரை திறக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

 

திருவாரூர் மாவட்டம் முழுவதும் குறிப்பாக திருவாரூர், குடவாசல், வலங்கைமான், மன்னார்குடி, வடபாதிமங்கலம், நன்னிலம், பேரளம், பூந்தோட்டம், கொல்லுமாங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 18 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடப்பாண்டில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 2000 ஏக்கர் பரப்பளவு குறைவானதாகும். பருத்தி சாகுபடியின் பரப்பளவு குறைந்ததற்க்கு கொரோனா தொற்றும் ஒரு காரணம் என விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

தற்போது பருத்தி செடிகளில் பூக்கள் பூத்து காய்கள் வைக்க தொடங்கியுள்ளன. சில பகுதிகளில் ஒரு சில தினங்களில் பருத்தி அறுவடை செய்ய தயார் நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில் பருத்தி செடிகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் சப்பாத்தி பூச்சி தாக்குதல் தற்போது அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

 

தமிழக அரசு சார்பில் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு ஊரடங்கு காலகட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டு இருந்தாலும், பருத்தி செடிகளில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் பூச்சி மருந்துகள் வாங்க தனியார் கடைகளை நாட வேண்டிய அவசியம் உள்ளது. இந்த நிலையில் பெரும்பாலான பூச்சி மருந்து கடைகள் மூடப்பட்டுள்ளன. ஒரு சில கடைகள் திறக்கப்பட்டு இருந்தாலும் அவைகளும் காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

விவசாயிகள் பூச்சி மருந்து வாங்குவதற்காக தங்களது வாகனங்கள் மூலமாக கடைத்தெருவிற்கு செல்லும்போது காவல்துறையினர் மறித்து வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை என்று அபராதம் விதிப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தடையின்றி அனைத்து பூச்சி மருந்துகளும், இடுபொருட்களும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

 

மேலும் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக நெல் சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்பட்டு பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது கோடைகால பணப்பயிராக கருதப்படும் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதாகவும், தங்களது வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மீட்டெடுக்க 50 சதவீத மானிய விலையில் பூச்சி மருந்துகள் மற்றும் இடுபொருட்களை விவசாயிகளுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.