தஞ்சாவூர்: தஞ்சையில் குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. அவற்றை மீண்டும் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு குப்பைத் தொட்டிகள் வைக்கவில்லை எனில் போராட்டம் நடத்தப்படும் என்று சிபிஎம்(எல்) எச்சரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சை மாநகராட்சியின் 51 வார்டுகளில் அகற்றப்பட்ட குப்பைத் தொட்டிகளை மீண்டும் பழைய இடங்களிலேயே வைக்க வேண்டும். இல்லையெனில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என சிபிஎம்(எல்) மக்கள் விடுதலை கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் நடைபெற்ற சிபிஎம்(எல்) மக்கள் விடுதலை கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வே. உமாபதி தலைமை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில், தஞ்சை மாநகராட்சியின் 51 வார்டுகளிலும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த குப்பைத் தொட்டிகள் அண்மையில் அகற்றப்பட்டதால், மக்கள் குப்பைகளை ஆங்காங்கே வீசி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.
மாநகராட்சி தற்போது வீடு வீடாகச் சென்று தள்ளுவண்டி மூலம் குப்பை சேகரிக்கும் முறையை அமல்படுத்தியிருந்தாலும், பணியாளர் பற்றாக்குறையால் தூய்மை பணியாளர்களுக்கு கூடுதல் வேலைப்பளு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் புதிய நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், முன்னர் இருந்த இடங்களிலேயே மீண்டும் குப்பைத் தொட்டிகளை அமைத்து, சுகாதார சீர்கேடு ஏற்படாமல் ஒரே இடத்தில் குப்பைகளை சேகரிக்கும் பழைய முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்காத பட்சத்தில், மக்கள் நலனை முன்னிறுத்தி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனுடன், அண்மையில் எம்.சி.பி.ஐ. கட்சியிலிருந்து மக்கள் விடுதலை கட்சியில் இணைந்த நிர்வாகிகளை இணைத்து புதிய மாவட்டக் குழுவும் அமைக்கப்பட்டது. மாவட்ட செயலாளராக வே. உமாபதி, மாவட்ட துணைச் செயலாளராக சா. செந்தில்குமார் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், தெருக்களில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகள் அனைத்தும் தலைக்குப்புற கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் குப்பைகளை அப்படியே வீசி செல்கின்றனர். மழைக்காலம் தொடங்கும் நிலையில் இதுபோன்ற செயல்களால் சுற்றுப்புறம் பாதிக்கப்படுவதோடு, தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் ஏற்படும். குழந்தைகள், முதியவர்கள் வெகுவாக பாதிக்கப்படுவர். எனவே இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுத்து குப்பை தொட்டிகளை அமைக்க வேண்டும் என்றனர்.
