கல்லிலே கலைவண்ணம் காண்பவர்கள் கலைஞர்கள். அந்த  கலைஞர்களுக்கு எப்போதும் ஏதாவது ஒன்றை வித்தியாசமான முறையில் சிந்தித்து கலைப்படைப்புகளை உருவாக்கி காண்பவர்களை பிரம்மிக்க செய்வார்கள். அவ்வாறான  படைப்புகளை உருவாக்கி பிரம்மிக்க வைக்கும் ஒரு இளைஞனைப் பற்றி இக்கட்டுரையில் இதில் காண்போம்.





இந்தியாவிலேயே முதன்முதலாக உருப்பெருக்கி கண்ணாடி மூலம் சூரிய ஒளியால் மரப்பலகையை கருக செய்து ஓவியம் படைத்து  வருகிறார்,  மயிலாடுதுறை தோப்பு தெருவை சேர்ந்த 30 வயதான இளைஞர் விக்னேஷ். 


சன்லைட் வுட் பர்னிங்  ஆர்ட் எனப்படும் இந்தக்கலையை கலிபோர்னியாவை சேர்ந்த மைக்கேல் பாப்பாடாகிஸ் என்பவர் தலைசிறந்து விளங்கி வருகிறார்.  இந்தியாவில் இதுவரை இந்தக்கலையைப் பயன்படுத்தி யாரும் ஓவியம் வரைந்ததில்லை என செல்லப்படுகிறது. இயந்திர உதவியுடன் கணினியை பயன்படுத்தி லேசர் கதிர்மூலம் மட்டுமே ஆங்காங்கே இதுபோன்ற வுட் பர்னிங் ஓவியங்கள்  வரையப்பட்டு வருகிறது. 




கலிபோர்னியாவை சேர்ந்த மைக்கேல் பாப்பாடாகிஸ் சமுக வலைதளங்களில் பின் தொடர்ந்த விக்னேஷ் அந்த கலையின் மீது ஆர்வம் வர தானாக மரபலகையில் சூரிய ஒளியை கொண்டு உருபெருக்கியை பயன்படுத்தி வரைய முயற்சித்து வெற்றி கண்டார்.




எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டயபடிப்பு படித்துள்ள விக்னேஷ் தான் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காததை அடுத்து  சென்னையில் கிடைக்கும் வேலையை செய்துவந்துள்ளார். அப்போது 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நல பாதிப்பால் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். அந்நேரத்தில் மனசோர்விலிருந்து மீள்வதற்காக  ஓவியம் வரையலாம் என்று  பொழுது போக்காக ஆரம்பித்த அவரது பணி,  வித்தியாசமான  சாதனை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில்   உருப்பெருக்கி கண்ணாடியை கொண்டு சூரிய ஒளியை குவித்து தீயை ஏற்படுத்தி  மரப்பலகையை கருக செய்து ஓவியம் தீட்டும் பணியில் சிறந்து விளங்கும் மைக்கேல் பாப்பாடாகிஸ் என்பவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு அவரை சமுக வலைதளங்களில் பின் தொடர்ந்து தற்போது அவர் பாணியில் ஓவியங்களை படைத்து வருகிறார்.




யுடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமுக வலைதளங்களை தனக்கு சாதகமாக்கிகொண்டு தான்  வரையும் ஓவியகளை வீடியோவாக பதிவிட்டுள்ளார். அதனை காணும் பலர் பல்வேறு ஊர்களிலிருந்து   விக்னேஷை தொடர்பு கொண்டு பாராட்டி வருகின்றனர்.




ஏழ்மை நிலையில் தீராத தாகத்துடன் தொடர்ந்து தனது கலைகளை படைத்து வரும் இவர் மேலும் நான்குவிதமான சாதனைகளைப் படைத்துவருகிறார்.  தத்ரூப முப்பரிமாண ஓவியம், அதி தத்ரூப ஓவியம், மினியேச்சர், நுண்ஓவியங்கள் போன்றவற்றை செய்துவருகிறார்.  அதி தத்ரூப ஓவியங்களுக்கு 35 முதல் 50 நாட்களும்,  சன்லைட் வுட் பர்னிங்  ஆர்ட் செய்வதற்கு 2 தினங்கள் முதல் அதிகபட்சம் 5 நாட்கள் வரை ஆவலாக கூறும் விக்னேஷ் கடுமையான வெயில் அடித்தால் தனது பணியை துரிதமாக்கிவிடுகிறது என்கிறார். 





சன்லைட் வுட் பர்னிங்  ஆர்ட் மூலம் திரைப்படத்துறையினரை வரைந்து அவற்றை சமூக வலைதளங்களில் உலாவ விட்டுவருகிறார், ஏராளமானோர் இந்த இளைஞரை பாராட்டியவண்ணம் உள்ளனர். திரைப்பட நடிகர்களும் அவர்களின் ஓவியங்களுகாக பாராட்டி வாழ்த்துத்தெரிவித்துள்ளனர். முப்பரிமாண ஓவியங்களைக்கண்டு ஓவியர்களே பொறாமை கொள்ளும்படி செய்து அசத்துகிறார்.  கலைஞரின் உருவத்தை இரண்டே தினங்களில் சன்லைட் வுட் பர்னிங்  ஆர்ட் மூலம் செய்து அசத்தினார். அரிசியில் ஓவியம், சாக்பீசில் உருவங்கள், வரலாற்று சின்னங்களை சிறிய உருவமாக செதுக்குதல் போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளார். மேலும் அரசு தனக்கு உதவி செய்தால் இந்தக்கலையை அரசு பள்ளி மாணவர்களுக்கும்   இலவசமாக கொண்டு செல்ல தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.