கும்பகோணம் சாலையில் நோ பார்க்கிங்கில் நிறுத்திய காரை, லாக் செய்த போக்குவரத்து போலீசாரை தரக்குறைவாக 'அவன் இவன்' என ஒருமையில் திட்டிய கிராம நிர்வாக அலுவலரின் வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கும்பகோணம் - தஞ்சை ஆயிகுளம் பகுதியில், திருவிடைமருதூர் அருகே உள்ள பவுன்டரீகபுரம் கிராம நிர்வாக அலுவலராக உள்ள சுரேஷ் என்பவர் நோ பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டு அருகில் உள்ள ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போது போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்த போக்குவரத்து ஆய்வாளர் சரவணகுமார், நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட கார் குறித்து மைக்கில் அறிவித்தார். அதன் பிறகு அருகிலுள்ள கடைகளிலும் கேட்டார். யாரும் தெரியாது என்று கூறவே, போக்குவரத்துக்கு இடையூராக சாலையின் ஒரத்தில், நிறுத்தி இருந்த கிராம நிர்வாக அலுவலர்  காரின் சக்கரத்தை லாக் செய்து விட்டு சென்று விட்டார். இதனால் காரை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.


இதனைத்தொடர்ந்து, சாப்பிட்டு விட்டு திரும்பி வந்த கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், கார் டயரை போலீசார் பூட்டி லாக் செய்திருப்பதை பார்த்தவுடன் ஆத்திரமடைந்து சத்தம் போட்டுள்ளார். அப்போது அங்கு வந்த போக்குவரத்து காவலரிடம், போக்குவரத்து ஆய்வாளரை அவன், இவன் என ஒருமையில் பேசி அவனை வரச் சொல் என்று கூறியுள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பானது.




அந்த வீடியோவில், கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், “எஸ்பியை வேண்டுமானாலும் வரச்சொல் பார்த்துக்கொள்ளலாம், லாக் போட்டு விட்டு இங்கு நிற்க வேண்டும், லாக் போட்டுவிட்டு நீ பாட்டுக்கு போய்ட்டா, நான் இங்க நிக்கணுமா? அவன் லாக் போட்டு விட்டு போய்விடுவான் போயிட்டு ஏழு மணி நேரம் கழித்து வருவான் அதுவரை இங்கேயே இருப்பாங்களா?. 10 நிமிடத்தில் என்னுடைய வண்டி லாக்கை எடுக்கவில்லை என்றால் தானாக எடுக்க வைப்பேன்” என அதிகார தோரணையில் பேசி அங்கு விசாரணைக்கு வந்த காவலர் இரு சக்கர வாகனத்தின் சாவியை பறித்து எறிந்துள்ளார்.


இதுகுறித்து கும்பகோணம் போக்குவரத்து ஆய்வாளர் சரவணகுமார்,  தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எஸ்பி ரவளிபிரியா, கும்பகோணம் வட்டாட்சியர் ஆகியோரிடம் கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளார்.


புகாரின் பேரில் கும்பகோணம் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சுரேஷ், திருநாகேஸ்வரம், மாங்குடி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக இருந்த சமயத்தில், கடந்த தேர்தலின்போது, பொது மக்கள் ஒருவர், வாக்காளர் அடையாள அட்டையை, சுரேஷிடம் கேட்டுள்ளார். இதனால் சுரேஷுக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து, சுரேஷ், தனது நண்பர்களுடன் சென்று, அவரை தாக்கி, தரக்குறைவாக பேசியுள்ளார் எனக் கூறப்படுகிறது. இது குறித்து திருநீலக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Karur Crime News: செயின் அறுந்ததால் ஆத்திரம்: நண்பனை அடித்துக் கொன்ற வாலிபர் கைது!