தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது: புதிய வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற்றபோது விவசாயிகளுக்கு பல்வேறு வாக்குறுதிகளை மத்திய அரசு அளித்தது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கவர்னர் தமிழகத்தில் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார். மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக கவர்னர் பேசி வருகிறார். பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் கவர்னர் ரவியை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.





இந்த கோரிக்கையை வலியுறுத்தி டிசம்பர் மாதம் 29-ந் தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சென்னையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் தற்போது மின்சார கட்டணம் செலுத்துவதற்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. ஆதார் எண்ணை இணைத்தாலும், இணைக்காவிட்டாலும் மின்கட்டணம் செலுத்தலாம் என அமைச்சர் கூறுகிறார். ஆனால் ஆதார் எண்ணை இணைத்தால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்கிற அறிவிப்பை மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க போதிய கால அவகாசத்தை மின்சார வாரியம் வழங்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

மாநில துணைச்செயலாளர் பெரியசாமி, மாவட்ட செயலாளர்கள் பாரதி, முத்து.உத்திராபதி, துணைச் செயலாளர் செந்தில்குமார், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம் ஆகியோர் உடன் இருந்தனர்.





தமிழகத்தில் மின்சார வாரியத்தின் சார்பாக மின் இணைப்புகளை நுகர்வோர்கள் தங்களது ஆதாருடன் இணைக்க வேண்டும் என அண்மையில் தெரிவித்தது. அதற்காக, தமிழக அரசு சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வந்தது. நுகர்வோர்கள் மின்சார நுகர்வு எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது. இதற்கிடையில், ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் வைத்துள்ளவர்கள் ஒரே ஆதாரை எப்படி இணைப்பது என்ற கேள்வி எழுந்து வந்தது. .இதற்கு தமிழக மின்வாரியம் பதில் அளித்துள்ளது.

தமிழகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்துள்ளவர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் தங்கள் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வைத்துள்ள நிலையில், அனைத்து மின் இணைப்புகளுக்கு ஒரே தொலைபேசி எண்ணை இணைத்துள்ளனர். இந்த நிலையில், அப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை தங்கள் பெயரில் கொண்ட நுகர்வோர்கள் தங்கள் மின் இணைப்புகளுடன் ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம். இதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை என்றும் இது மின் இணைப்புகளை ஒழுங்குப்படுத்தும் நடைமுறை என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.