தஞ்சாவூர்: தஞ்சையில் கலை பண்பாட்டுத்துறை மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பாக 3 நாட்கள் நடக்கும் தஞ்சை சங்கமம் நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், எம்.எல்.ஏ., டி.கே.ஜி. நீலமேகம் ஆகியோர் முரசு கொட்டி தொடக்கி வைத்தனர்.


தஞ்சை சங்கமம் நம்ம ஊரு திருவிழா


தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கலைக் கல்லூரி அருகில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலைய விளையாட்டு மைதானத்தில் “தஞ்சை சங்கமம் நம்ம ஊரு திருவிழா” மற்றும் “மாபெரும் தஞ்சாவூர் உணவுத் திருவிழா” நேற்று மாலை நடந்தது. 


இந்த நிகழ்ச்சியை தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், எம்.எம். ஏ. டி.கே.ஜி. நீலமேகம், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் முரசு கொட்டி தொடங்கி வைத்தனர். தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு கலைவளர்மணி, கலை இளமணி உட்பட பல விருதுகள் வழங்கப்பட்டது. சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.




கலைநிகழ்ச்சிகள் நடந்தன


இதையடுத்து கரகாட்டம், பொய்க்கால்குதிரை, தப்பாட்டம், கொம்பு வாத்தியம், பம்பை, சாமியாட்டம், புலியாட்டம், காவடியாட்டம், நாட்டுப்புறப் பாடல், ஆண்கள் பெண்கள் தப்பாட்டம், சிலம்பாட்டம், புலியாட்டம், நையாண்டி மேளம், நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சி, கோலாட்டம், சிவன் சக்தி மாடு மயிலாட்டம், கலைசங்கமம், நாட்டுப்புற நடனம், கிராமிய ஆடல், பாடல் நிகழ்ச்சி,  மல்லர் கம்பம், கயிறு மல்லர் கம்பம், கரகம், காவடி நாட்டுப்புற ஆடல், பாடல் நிகழ்ச்சி, நையாண்டி மேளம், கரகாட்டம் லாவணிக் கலைக்குழு, நையாண்டிக் கரகம் உட்பட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


நாளை வரை நடக்கும் உணவு திருவிழா


தொடர்ந்து, இன்று சனிக்கிழமை மற்றும் நாளை  ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறவுள்ள இவ்விழாவில் ஏறத்தாழ நூறு உணவு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பாரம்பரிய உணவு வகைகள் முதல் இன்றைய கால உணவு வகைகள் வரை இடம்பெற்றுள்ளன.


மேலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி போன்ற உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏறத்தாழ 500}க்கும் அதிகமான நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கேற்கும் நையாண்டி மேளம், கரகாட்டம், தப்பாட்டம், பொய்க்கால்குதிரை ஆட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், பம்பையாட்டம், மள்ளர் கம்பம், சிலம்பாட்டம், தெருக்கூத்து, பொம்மலாட்டம், நாட்டுப்புற ஆடல் பாடல் உள்ளிட்ட கிராமிய கலை விழா நடைபெறுகிறது. 


நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன்,  கும்பகோணம் மேயர் சரவணன், தஞ்சை துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சித்ரா, மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் மதியலகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, ஒன்றிய குழு துணை தலைவர் அருளானந்த சாமி, கலை பண்பாட்டு துறை அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.


நேற்று மாலை நிகழ்ச்சி தொடங்கிய ஒரு மணி நேரத்தில் மழை குறுக்கிட்டது. சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேல் பெய்த கனமழையால் நிகழ்ச்சிகளில் தடை ஏற்பட்டது.