தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியில் ரூ.133.58 கோடியில் முடிவுற்ற 12 பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

திருச்சியில் நடைபெற்ற வேளாண் சங்கமம் நிகழ்வில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் கார் மூலம் தஞ்சாவூருக்கு வருகை தந்தார். தஞ்சாவூர் சுற்றுலா ஆய்வு மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்த முதல்வர், பின்னர் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வந்து மாநகராட்சியில் முடிவுற்றப் பணிகளை  திறந்து வைத்தார்.

அதன்படி, தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி  திட்டத்தின் கீழ், ரூ.61.79 கோடி மதிப்பீட்டில் மாநாட்டு மையம்,  ரூ.10.46 கோடியில் ஆம்னி பேருந்து நிலையம், ரூ.7.32 கோடியில்  மாநகராட்சி பள்ளிகளை ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றுதல். ரூ.15.69 கோடியில் சூரிய ஒளி மின் நிலையம் அமைத்தல், ரூ.15.61 கோடியில் காந்திஜி வணிக வளாகத்தை மேம்படுத்தும் பணி,  ரூ.2.25 கோடியில் கருணா சுவாமி குளம் மேம்படுத்தும் பணி, ரூ.1.44 கோடியில் அழகி குளம் மேம்படுத்தும் பணி, ரூ.3 கோடியில் அண்ணா சாலை வணிக வளாகம் ஆகியவை கட்டப்பட்டுள்ளது.


அதேபோல் தேசிய நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் நோயாளிகள் உடன் இருப்போர் தங்குமிடம் கட்டும் பணி ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பிலும், தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் வார்டு பகுதியில் நோயாளிகள் உடன் இருப்பவர் தங்குமிடம் கட்டிடம் கட்டும் பணி ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பிலும், தீப்புண் வார்டு பகுதியில் நோயாளிகள் உடன் இருப்பவர் தங்குமிடம் கட்டிடம் கட்டும் பணி ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.133 கோடியே 56 லட்சம் மதிப்பிலும் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும், மாநகராட்சி பொது நிதியிலிருந்து மாநகராட்சி ஆணையர் குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணி ரூ.1 கோடி மதிப்பில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்த பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் திறந்து வைத்தார். விழாவில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வரவேற்றார்.  மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் நன்றி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்.எஸ்.சிவசங்கர், எம்பிக்கள் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், அ.இராசா, முன்னாள் எம்பி ஏகேஎஸ்.விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து தஞ்சாவூரில் நடைபெற்ற கட்சி பிரமுகர் பந்தல் சிவா என்பவரின் இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டுவிட்டு, கார் மூலம் அரியலூர், பெரம்பலூர் வழியாக சென்னைக்கு சென்றார். தஞ்சாவூருக்கு தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முதல்வர் திடீர் ஆய்வு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி, தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சிக்கு கடந்த புதன்கிழமை காலை வந்தார். பின்னர் திருச்சியில் நேற்று காலை காலை வேளாண் சங்கமம் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் கார் மூலம் தஞ்சாவூர் நோக்கிப் புறப்பட்டார்.

தஞ்சாவூருக்கு வரும் வழியில் செங்கிப்பட்டி அருகே மனையேறிப்பட்டி கிராமத்தில் காரை நிறுத்த கூறினார். பின்னர் அப்பகுதியிலுள்ள கிராம சேவை மையத்தில் நடைபெறும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான விண்ணப்பப் பதிவேற்றப் பணி நடைபெற்றதை திடீர் ஆய்வு செய்தார். அப்போது, அங்கிருந்த பெண்களிடம் விண்ணப்பங்கள் கொடுத்து விட்டீர்களா? எனக் கேட்டு தொகை கிடைப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன் என உறுதியளித்தார்.

ஆய்வின்போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் மற்றும் பலர் உடனிருந்தனர்.