தஞ்சாவூா்: வரும் 15ம் தேதி திருச்சிக்கு வந்தபின்னர் கல்லணைக்கு சென்று டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். 

தஞ்சை மாவட்டத்தில் 15, 16 ஆகிய 2 நாட்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில் கருணாநிதி சிலை திறப்பு, ரோடு ஷோ, நிர்வாகிகளுடன் சந்திப்பு, மாவட்ட செயலாளர் இல்லத் திருமண விழா, அரசு சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். கடந்த 12ம் தேதி மேட்டூர் அணையை முதல்வர் ஸ்டாலின் காவிரி டெல்டா பாசனத்திற்காக திறந்து வைத்தார்.

இந்நிலையில் வரும் 15ம் தேதி தஞ்சாவூருக்கு முதல்வர் ஸ்டாலின் வருவதற்கு முன்னதாக கல்லணைக்கு சென்று பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதன்முறையாக மேட்டூரிலும், கல்லணையிலும் தண்ணீர் திறந்து வைத்த முதல்வர் என்ற பெருமையை பெறுகிறார். 

இதற்கிடையில் இன்று தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை அமையும் இடத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், மண்டல பொறுப்பாளருமான கே.என்.நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் சிலை அமையும் இடத்திற்கான மாதிரி வரைபடத்தை பார்த்தனர். சிலையை சுற்றிலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் முதல்வர் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சைக்கு வருகிற 15, 16 தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் 15ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு மதியம் வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கல்லணை வருகிறார்.

அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு மாலையில் மேட்டூர் அணையை தொடர்ந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுகிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக தஞ்சாவூர் வருகிறார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். பின்னர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவ சிலையை திறந்து வைக்கிறார். 

மறுநாள் 16-ந்தேதி மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை சந்திரசேகரன் இல்ல திருமண விழாவில் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைக்கிறார். இதையடுத்து அரசு நலத்திட்ட உதவிகள்  வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ, மாநகர செயலாளர் மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.