Just In





பெரிய நிறுவனங்களில் வேலை பார்க்கும் தமிழர்கள்.. இந்தியால் இப்படி நடந்திருக்குமா..? - விளாசிய முதல்வர் ஸ்டாலின்
உலகம் முழுவதும் பெரிய நிறுவனங்களில் தமிழர்கள் வேலை பார்க்கின்றனர். இது எப்படி முடிந்தது. இந்தி கற்றுக் கொண்டிருந்தால் நம்மால் இந்த உயரத்தை அடைந்திருக்க முடியுமா?

தஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தனித்துவம் சிலரின் கண்களை உறுத்துகிறது. உலகம் முழுவதும் பெரிய நிறுவனங்களில் தமிழர்கள் வேலை பார்க்கின்றனர். இது எப்படி முடிந்தது. இந்தி கற்றுக் கொண்டிருந்தால் நம்மால் இந்த உயரத்தை அடைந்திருக்க முடியுமா. முடியவே முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அதில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் பேசியதாவது: நாகை மாவட்டத்தில் மொத்தம் 260 கோடி மதிப்புள்ள இந்த விழாவில் மிக பிரம்மாண்டமாய் எழுச்சியோடு செய்துள்ள மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியையும், மாவட்ட கலெக்டரையும் அவருக்கு துணை நின்ற அனைவரையும் வாழ்த்துகிறேன். கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 24 கூடிய 88 லட்சம் மதிப்பீடு 42 கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இதுவரை 33 உட்கட்டமைப்பு பணிகள் செயல்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 334 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் 161 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு பயன்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. நகர்புற பகுதிகளில் 79 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் 36 கோடியே 96 லட்சத்தில் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு இதுவரை 74 கிலோ மீட்டர் சாலை பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 14 பாலங்கள் கட்டக்கூடிய பணிகள் 132 கோடியே 14 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு இதுவரை 13 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 194 திருக்கோயில்களில் 70 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பில் 668 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது . 80 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 55 மருத்துவ கட்டமைப்புகள் செய்து தரப்பட்டுள்ளது. இதெல்லாம் செயல்படுத்த திட்டங்கள் என்றால் செயல்படுத்தப்பட்டிருக்கும் திட்டங்களை சொல்ல வேண்டும் என்றால் நாகையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. நெடுஞ்சாலைத்துறையில் 182 கிலோமீட்டர் சாலை பணிகள் 252 கோடியே 22 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நான்கு பேரூராட்சிகள் மற்றும் 6 ஊராட்சி ஒன்றியகளுக்கு 1752 கோடியே 42 லட்சம் மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டம் நடைபெற்று வருகிறது. வேதாரண்யம் அவ்வையார் விசாலசாமி திருக்கோயில் திருப்பணிகளை 13 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் தொடங்க உள்ளது. வேதாரண்யம் அரசு மருத்துவமனை 20 கோடி ரூபாய் மதிப்பில் தரம் உயர்த்தப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சாமந்தான் பேட்டையில் சிறிய மீன் பிடித்திருக்கும் அமைப்பதற்காக திட்ட மதிப்பீடு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்திற்கு மட்டுமே இவ்வளவு திட்டங்கள் செய்து தரப்பட்டுள்ளது என்றால் தமிழ்நாடு முழுவதும் எவ்வளவு திட்டங்கள் செய்யப்பட்டிருக்கிறது என்று நினைத்து பார்க்க வேண்டும்.
மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் இரண்டு லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 3695 பேர் உயிர் காக்கப்பட்டுள்ளது 46,913 பேர் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர். 17767 கர்ப்பிணி தாய்மார்களுக்கு நிதி உதவி தரப்பட்டுள்ளது. 17, 332 குழந்தைகள் காலை உணவு திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். 17588 பயனாளிகளுக்கு ரூ. 58 கோடியே 67 லட்சம் மதிப்பில் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நிவாரணத் தொகை 8000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த நாகை மாவட்டத்திற்கான 6 முக்கிய அறிவிப்புகளை இப்பொழுது நான் வெளியிடுகிறேன். முதல் அறிவிப்பு வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தென்னடார் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் ரூ.280 கோடி செலவில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. காவிரி டெல்டா பகுதியில் அனுமதிக்கத்தக்க தகுந்த வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய தொழிற்சாலைகள் இங்கு தொடங்கப்படும்.
இரண்டாவது அறிவிப்பு விழுந்தமாவடி, வானவன்மாதேவி, காமேஸ்வரம் ஆகிய மீனவர் கிராமங்களில் 12 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும். மூன்றாவது அறிவிப்பு தெற்கு பொய்கை நல்லூர் பகுதியிலும், கோடியக்கரையிலும் தலா ரூ.8.50 கோடி மதிப்பில் மூன்று தளங்கள் பல்நோக்கு பேரிடர் மையங்கள் அமைக்கப்படும். நான்காவது அறிவிப்பு நாகை நகராட்சியின் கட்டிடம் ரூ.4 கோடி மதிப்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். ஐந்தாவது அறிவிப்பு நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் பகுதியில் உள்ள பல்வேறு வடிகால்கள், வாய்க்கால்களின் மதகுகள் ரூ.32 கோடி மதிப்பில் சீரமைக்கப்படும். இதுமட்டுமில்லாமல் நாகூர் தர்கா இந்த நாகை மாவட்டத்தில் தான் உள்ளது. இங்குள்ள இஸ்லாமிய மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியை தெரிவிக்கிறேன். புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளக்கூடிய இஸ்லாமியர்களுக்காக சென்னை நங்கநல்லூரில் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும்.
மீனவர்கள் நிறைந்த நமது மாவட்டத்தில் மிகப்பெரிய பிரச்சினை இலங்கை கடற்படையால் நம்முடைய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர் கடந்த 22 ம் நாள் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 32 மீனவர்களையும், அவர்களின் 5 மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படை 23ம் நாள் கைது பறிமுதல் செய்தது. உடனடியாக இது தொடர்பாக இந்திய வெளியுறவு துறை அமைச்சருக்கு நான் கடிதம் எழுதி இருந்தேன். இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது. கடந்த மாதம் 18ம் நாள் மீனவர் சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்னை கோட்டையில் சந்தித்து இது குறித்து பேசினர். அவர்கள் வேதனையுடன் குறிப்பிட்டது என்னவென்றால் நம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்கின்றனர்.
படகுகளை அவர்களின் படகுகளை கொண்டு மோதி நாசப்படுத்துகின்றனர். மீன்களை பறித்துக்கொண்டு செல்கின்றனர். இவ்வாறு தங்கள் மனக்குமுறல்களை வெளிப்படுத்தினர். அது மட்டுமல்ல அண்மை காலத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யும் போது பெரும் தொகையை இலங்கை நீதிமன்றங்கள் அபராதமாக விதிக்கின்றன. பறிமுதல் செய்யப்பட்ட மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசு அவர்களை விடுதலை செய்யும் பொழுது அபராதமும் விதிக்கிறது. இது தங்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக மாறி உள்ளது என வேதனையுடன் தெரிவித்தனர். 2016 ம் ஆண்டு பிரதமர் மோடி பதவி ஏற்றது முதல் இந்த பத்தாண்டு காலத்தில் மட்டும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை 3656. அதிலும் நாகை மாவட்டத்தை சார்ந்தவர்கள் 116 பேர். 616 விசைப்படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் இறுதிவரை இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கி உள்ளது குறித்து இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு ஒன்றிய அரசிடம் தான் உள்ளது.
2019 முதல் இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் பல கட்டமாக நடந்த பேச்சுவார்த்தை தற்போது நடப்பதில்லை. இந்தியா தரப்பில், இலங்கை அரசின் தரப்பில் நான்கு பேரும் இணைந்து ஒரு குழு அமைத்து தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு கண்டு வருகிறோம் என ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினாரே தவிர எதுவும் இதுவரை நடைபெறவில்லை அதற்கு முதலில் தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக ஒன்றிய அரசு பார்க்க வேண்டும். பிரதமர் மோடி அவர்களே இதில் நீங்கள் தான் நேரடியாக தலையிட்டு தீர்க்க வேண்டும். காலம் காலமாக மீனவர்கள் கைது செய்யப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மிக கொடுமையான விதிமுறைகள் தண்டனைகள் அடங்கியுள்ள 2016 ஆம் ஆண்டு சட்டத்தை இலங்கை அரசு நீக்க வேண்டும். சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களின் பிடிக்கப்பட்ட படகுகளையும் மீட்க வேண்டும். மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்க வேண்டும். கச்சத்தீவு அருகே தமிழ்நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்க இலங்கை அனுமதிக்கும் வகையில் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வராக நான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி முழுமையாக வருவதில்லை. நிவாரண நிதி முழுமையாக தருவதில்லை. பள்ளி மாணவ மாணவிகளின் படிப்புக்காக தரவேண்டிய நிதியும் தரவில்லை. இதை தர வேண்டும் என்றால் மும்மொழி திட்டத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்கிறார்கள் நிபந்தனை விதிக்கின்றனர். இதை மத்திய அரசு ஏன் செய்கிறது தெரியுமா? தமிழக அரசின் இரு மொழி கொள்கையின் வெற்றிதான். மத்திய அரசின் அனைத்து புள்ளிவிபரங்களிலும் நாம் முன்னிலை வகிக்கிறோமோ அது தெரியாதா. நன்கு தெரியும் தெரிந்தும். ஏன் செய்கிறார்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சி. தமிழ்நாட்டின் தனித்துவம் சிலரின் கண்களை உறுத்துகிறது. உலகம் முழுவதும் மிகப்பெரிய நிறுவனங்களில் நமது தமிழர்கள் உள்ளனர். அதற்கு காரணம் ஆங்கிலம் கற்றுக் கொண்டதுதான். இந்தி கற்றுக் கொண்டிருந்தால் நம்மால் இந்த உயரத்தை அடைந்திருக்க முடியுமா. முடியவே முடியாது. நம் தாய்மொழி தமிழ். உலகத்துடன் பேச ஆங்கிலம். இதுதான் அடிப்படை நான் இன்னும் வெளிப்படையாக சொல்கிறேன். இந்தி ஆதிக்கம் எதற்கு என்றால் சிலருடைய சமூக ஆதிக்கத்தை நிலை நிறுத்தத்தான். இதை உணர்ந்த காரணத்தினால் தான் இந்தி திணைப்பு எதிர்க்கிறோம். இந்த சதியை பல ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகம் உணர்ந்துவிட்டது. அந்த சதியின் தொடர்ச்சி தான் இப்போது நடக்கும் விஷயங்களை என்பது தமிழக குழந்தைகள் கூட உணர்ந்துள்ளனர். செய்திகளிலும் சமூக வலைதளங்களில் பார்த்திருப்பீர்கள். கடலூரைச் சேர்ந்த சிறுமி ஒன்றிய நிதி தரவில்லை என்றால் என்ன நான் தருகிறேன் என தனது சேமிப்பு பணத்தை பத்தாயிரம் காசோலையாக அனுப்பி வைத்தார்.
குழந்தைகளுக்கு கூட ஒன்றிய அரசின் சதி புரிந்து உள்ளது. நாட்டுக்காக உழைக்க தான் உரிமைகளை பெற்று தரத்தான் இந்த ஸ்டாலின் வாழ்வு உள்ளது. போராடி பெற்ற நமது உரிமைகளை கூட எப்படியெல்லாம் பறிக்கலாம் என்று ஒன்றிய ஆட்சியில் இருப்பவர்கள் நினைக்கின்றனர். நமது பிரதிநிதித்துவத்தை குறைக்க தான் தொகுதி சீரமைப்பு வரப்போகிறது. அதனால் தான் முன்னெச்சரிக்கையுடன் அதற்கு எதிராக குரல் எழுப்ப தொடங்கியுள்ளோம். நாளை மறுநாள் இது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி இருக்கிறோம். அனைத்து கட்சி கூட்டத்திற்கு அனைவரும் வாருங்கள். அனைவருக்கும் அனைத்தும் என்ற வளர்ச்சியான தமிழ்நாட்டை உருவாக்குவோம். இந்தியாவின் முதன்மை மாநிலமாக வெற்றி நடை போடுவோம். அதற்கு எந்த இடர் வந்தாலும் யார் தடை போட்டாலும் அதை வென்று இந்த தமிழ்நாட்டை மக்களான உங்கள் துணையுடன் இந்த ஸ்டாலின் காப்பாற்றுவான். இவ்வாறு அவர் பேசினார்.