திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மூங்கில்குடி, குடவாசல், வலங்கைமான், மன்னார்குடி, ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்கின்ற பொருள்களை பாதுகாத்து வருகின்றனர். மேலும் ஆண்டுக்காண்டு சாகுபடி பரப்பளவு அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டிடங்களை ஒழுங்குமுறை விற்பனை கூடம் வளாகத்தில் கட்டித் தரவேண்டும் அப்பொழுதுதான் அதிக அளவு நெல் பருத்தி உள்ளிட்ட பயிர்களை சேமித்து வைப்பதற்கு விவசாயிகளுக்கு பயன் தரும் என தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். அதனை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் டெல்டா மாவட்டங்களில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக வரி துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகங்களில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வந்தன. இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வழியாக வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக வரித் துறையின் சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு கோடியே 33 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு மற்றும் விற்பனைக்கூட அலுவலக கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.



அதனையொட்டி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் காயத்ரி கிருஷ்ணன் கூறியதாவது, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 4,500 மெட்ரிக் டன் கொள்ளளவு உள்ள கிடங்குகள் மற்றும் பரிவர்த்தன கூடங்களின் வசதிகளை கொண்டு மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர், மற்றும் கூத்தாநல்லூர் வட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை சேமித்து பொருளீட்டு கடன் பெற்றும் விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். மேலும் ஆண்டுதோறும் சராசரியாக மன்னார்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 150 லட்சம் முதலீடு கடன் வழங்கப்பட்டு சுமார் 100 விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். அந்த வகையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கில் சுமார் 3000 முதல் 4000 நெல் மூட்டைகள் சேமித்து கூடுதலாக பொருளீட்டு கடன் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம் இதனை மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.



 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியம் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை செயலாளர் சரஸ்வதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மன்னார்குடி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு எங்கள் பகுதியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் வளாகத்தில் புதிய கட்டிடங்கள் கட்டித் தர வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தோம். அதனை ஒட்டி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து புதிய கட்டிடம் கட்டி கொடுத்ததற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இதேபோன்று நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மன்னார்குடி பகுதிகளில் திறந்தவெளி கிடங்கின் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதற்கும் புதிய கட்டிடம் கட்டித் தந்து நெல் மூட்டைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் எடுக்க வேண்டும் என விவசாயிகள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.