திருவாரூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை  ஓபிஎஸ் இபிஎஸ் இணைந்து பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர்.

 

காவிரி டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்து டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி, இதேபோன்று காரைக்கால், புதுச்சேரி, உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பத்து தினங்களுக்கு மேலாக கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கி இருந்தன.

 

இதனையடுத்து டெல்டா மாவட்டங்களில் மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்வதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு டெல்டா பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் பயிர் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்கள் முழுவதுமாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆய்வு பணியில் ஈடுபட்டார். இந்த நிலையில் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு விவசாயிகளை நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறினர்.



திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையால் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறுவதற்காக தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி, தமிழக எதிர்கட்சி துனைத் தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று மாலை வருகை தந்தனர். திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த அதிமுக தலைவர்களுக்கு திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாமணியில் அதிமுகவின் சார்பில் கட்சியின் வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், திருவாரூர் மாவட்டச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் காமராஜ்  தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டி அருகே ராயநல்லூர், சிதம்பரம் கோட்டகம் மற்றும் புழுதிக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஆறுதல் தெரிவித்தனர். மேலும் புழுதிகுடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுகவின் சார்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுகவின் சார்பில் அரிசி, காய்கறி, வேட்டி, சேலை, போர்வை, பாய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. 



இதனை தொடர்ந்து கோட்டூர், மன்னார்குடி, பைங்காநாடு, திருமக்கோட்டை ஆகிய இடங்களில் திரண்டிருந்த விவசாயிகளையும் பொதுமக்களையும் சந்தித்து மழை பாதிப்பு குறித்து கேட்டறிந்து ஆறுதல் தெரிவித்து சென்றனர்.   இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்டச் செயலாளர் காமராஜ் எம்எல்ஏ, கட்சியின் அமைப்புச் செயலாளர் சிவா.ராஜமாணிக்கம், மாவட்ட நிர்வாகிகள் பொன்.வாசுகிராம், பொருளாளர் பன்னீர்செல்வம், பாசறை செயலாளர் கலியபெருமாள், ஒன்றிய செயலாளர்கள் கோட்டூர் ஜீவானந்தம்,  சிங்காரவேலு, தமிழ்செல்வன், ஒன்றிய குழு தலைவர்  மனோகரன், நகர செயலாளர்கள் குமார், சண்முகசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

முன்னதாக கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை நேரடியாக பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் அளித்தனர் அதனைத் தொடர்ந்து சிதம்பரம் சீர்காழி மாயவரம் காரைக்கால் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சம்பா சாகுபடி பயிர்களை விவசாயிகள் அதிமுக தலைவர்களிடம் எடுத்து காண்பித்தனர் அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் தனது ஆய்வினை முடித்துக்கொண்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.