தமிழ்நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக நாடு முழுவதும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மழை நீரில் மூழ்கியுள்ளன. அதனை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பெயர்களை ஆய்வு செய்வதற்கு அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பயிர் பாதித்த இடங்களை அமைச்சர்கள் குழு ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று திருவாரூர் மாவட்டத்தில் பயிர் பாதித்த பகுதிகளான கண்கொடுத்தவனிதம் காவனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஐ.பெரியசாமி தலைமையிலான அமைச்சர்கள் குழு நேற்று ஆய்வு செய்தது. இந்த நிலையில் இன்று டெல்டா மாவட்டங்களில் கன மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.



 

இன்று காலை கடலூர் மாவட்டம் அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களில் ஆய்வு செய்த முதலமைச்சர் அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தனது ஆய்வு பணியை தொடங்கினார். திருவாரூர் மாவட்டம் ராயநல்லூர் பகுதியில் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியிருந்தது. பாதிக்கப்பட்ட பயிர்களை விவசாயிகள் முதலமைச்சரிடம் எடுத்து காண்பித்தனர். மேலும் வேளாண்துறை அதிகாரிகள் மாவட்டத்தில் கனமழையால் பயிர் பாதிப்புகள் குறித்த விளக்கத்தை தமிழக முதலமைச்சரிடம் தெளிவுப்படுத்தினர். அதனை தொடர்ந்து புழுதிகுடி கிராமத்தில் பயிர் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

 




 


 

முதலமைச்சர் ஆய்வின்போது விவசாயிகள் தாங்கள் பயிரிட்டு இருந்த பயிர்கள் அனைத்தும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன மேலும் இந்த பயிர்களை காப்பாற்ற முடியாது உரிய நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் முதலமைச்சரிடம் அறிவுறுத்தினர். இதனை கேட்ட முதலமைச்சர் விவசாயிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் பெரியசாமி, தங்கம் தென்னரசு, சக்கரபாணி பெரிய கருப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன் டி.ஆர்.பி.ராஜா, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.