தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாநகராட்சி சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டுள்ள ரூ.140 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளார்.
முன்னதாக இந்த கட்டிடத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நாளை (27ம் தேதி) மாலை 5 மணி அளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 140 கோடி அளவில் கட்டி முடிக்கப்பட்ட திட்ட பணிகளை திறந்து வைக்க உள்ளார். இதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.61.79 கோடி மதிப்பில் மாநாட்டு மையம் கட்டிடம், ரூ.10.46 கோடியில் ஆம்னி பேருந்து நிலையம், ரூ.4.39 கோடியில் ராஜகோரி மயானத்தில் எரிவாயு தகன மையம், ரூ.7.32 கோடியில் மாநகராட்சி பள்ளிகளை சீர்மிகு பள்ளிகளாக மாற்றுதல், ரூ.15.69 கோடியில் சூரியஒளி மின்நிலையம், ரூ.11.50 கோடியில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் பூங்கா (STEM Park), ரூ.2.61 கோடியில் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் ரூ.15.61 கோடியில் காந்திஜி வணிக வளாகத்தை மேம்படுத்தும் பணி.
ரூ.2,25 கோடியில் கருணா சுவாமி குளம் மேம்படுத்தும் பணி, ரூ.1.44 கோடியில் அழகிகுளம் மேம்படுத்தும் பணி, ரூ.2.95 கோடியில் பெத்தண்ணன் கலையரங்கத்தை தியேட்டராக மாற்றும் பணி, ரூ.1.50 கோடியில் அரசு இராஜா மிராசுதார் மருத்துவமனையில் நோயாளிகள் உடனிருப்போர் தங்குமிடம், ரூ.1.50 கோடியில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கேன்சர் வார்டு பகுதியில் நோயாளிகள் உடனிருப்போர் தங்குமிடம், ரூ.1.50 கோடியில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீப்புண் வார்டு பகுதியில் நோயாளிகள் உடனிருப்போர் தங்குமிடம் கட்டும் பணி என மொத்தமாக ரூ.140 கோடி பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்களை நாளை மாலை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், ஐஜி பாலகிருஷ்ணன், டிஐஜி ஜெயச்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் மற்றும் ஏடிஎஸ்பி, டிஎஸ்பிகள், மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி உட்பட பலர் உடன் இருந்தனர்.