நாகையில் சுகாதாரமற்ற  இடத்திற்கு பள்ளியை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கோட்டாட்சியர் விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டதை அடுத்து மூன்று நாட்களுக்கு விடுமுறை அளித்து பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

நாகை காடம்பாடியில் இஜிஎஸ் பிள்ளை குடும்பத்திற்கு சொந்தமான மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நாகூர், நாகை பகுதியைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். காடம்பாடியில் செயல்பட்டு வரும் பள்ளி பராமரிப்பு பணி செய்ய உள்ளதாக கூறி 3 மாதம் தெத்தி பகுதியில் உள்ள இஜிஎஸ் பிள்ளை இன்ஜினியரிங் கல்லூரி கட்டிடத்திற்கு இடம் மாற்றம் செய்யப்படுவதாக பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் கடந்த ஓராண்டாக மீண்டும் அந்த வளாகத்திற்கு மாற்றாமல் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை இழுத்தடிப்பு செய்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வந்த கட்டிடத்தில் சிபிஎஸ்இ பள்ளியை  தொடங்கியுள்ளனர். தற்போது செயல்பட்டு வரும் கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடத்திலிருந்து வேறு ஒரு பழைய பயன்பாட்டில் இல்லாத கட்டிடத்திற்கு பள்ளி மாற்றுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளனர். இதற்கு  பெற்றோர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு காடம்பாடியில் உள்ள பழைய கட்டிடத்திற்கு பள்ளியை மாற்ற வேண்டுமென தெரிவித்துள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த பள்ளி நிர்வாகம் அந்த கட்டிடத்தில் சிபிஎஸ்சி பள்ளி செயல்படுவதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து  இன்று பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஜானி டாப் வர்கீஸ் மாணவர்களை மற்றும் பெற்றோர்களிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தார்.



 

மேலும் கோட்டாட்சியர் பினோத் மிருகேந்தர் லால் தலைமையில் உடனடியாக விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டார். அப்போது பள்ளி நிர்வாகத்தினர் மாவட்ட ஆட்சியருக்கு வந்த பொழுது பெற்றோர்கள் அவர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தரமான பள்ளி வளாகம் என நம்பி பள்ளியில் சேர்த்த மாணவர்களுக்கு சுகாதாரமற்ற அறையில் பாடம் நடத்த உள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் காற்றோட்டம் இல்லாத கட்டிடத்தில் பள்ளி இயங்கினால் தங்கள் குழந்தைகள் பாதிக்கப்படுவதுடன் கல்வியும் பாதிக்கப்படும் நிலை உள்ளதால் ஆரோக்கியமான இடத்தில் பள்ளியை நடத்த வேண்டும் என பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். முதன்மை செயல் அதிகாரி சந்திரசேகரிடம் கேட்டபோது, பள்ளி மூன்று நாட்களுக்கு விடுமுறை அளித்துள்ளதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தவர் ஆட்சியரிடம் பேசுவதற்காக செல்கிறோம் என தெரிவித்து அவர் சென்றார்.

 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.