பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்கும் திட்டங்களை மத்திய அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத்தலைவர் சேதுராமன் மன்னார்குடியில் பேட்டியளித்தார்.

 

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகிய தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நிலக்கரி,  நிலக்கரி படுகை மீத்தேன் (CBM) மற்றும் நிலத்தடி நிலக்கரியை வாயுவாக்கும் (UCG)  திட்டங்களை செயல்படுத்துவதற்கான அழைப்பாணைக் குறிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. டெல்டா பகுதியான தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் மன்னார்குடி பழுப்பு நிலக்கரி  வட்டாரத்தில், 68 சதுர கிமீ. கொண்ட வடசேரி பழுப்பு நிலக்கரிப் பகுதியில்  நிலக்கரியாகவோ, நிலக்கரி படுகை மீத்தேனாக மற்றும் நிலத்தடி நிலக்கரியை வாயுவாக எடுக்கும் திட்டங்களை செயல்படுத்துவதற்கு கடந்த 29.03.2023 அன்று மத்திய நிலக்கரி அமைச்சகம் அழைப்பாணை விடுத்துள்ளது.



 

மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் நிலக்கரி எடுப்புத் திட்டத்தின்,  17/7 ஆவது பகுதியாக நாடு முழுவதும்  101 இடங்களில் நிலக்கரி மற்றும் அதை சார்ந்த பொருட்களை எடுக்க அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டின் மூன்று இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதில்  தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய வடசேரி நிலக்கரி பகுதி ஆகியவை ஆகும். அந்த அழைப்பானை படி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் எதிர்வரும் மே 30 ஆகும்.  மேற்கண்ட 101 இடங்களுக்காக விண்ணப்பிக்கும்  நிறுவனங்களுள், தேர்வு செய்யப்படும் நிறுவனங்கள் குறித்து,தேர்வு குழுவால், 2023 ஜூலை 14 அன்று மத்திய  அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறிப்பாக வடசேரி பகுதியில் தஞ்சாவூர் மாவட்டம் கீழக்குறிச்சி, ஆவிக்கோட்டை, அண்டமி, மோகூர் கருப்பூர்,பரவாத்தூர், கண்ணுகுடி,கொடியாளம், வடசேரி மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் மகாதேவப்பட்டினம், உள்ளிக்கோட்டை, கண்டிதம்பேட்டை, கண்ணாரப்பேட்டை, கூப்பாச்சிக் கோட்டை, பரவாக்கோட்டை மற்றும் தளிக்கோட்டை உள்ளடக்கிய பகுதிகள் வடசேரி நிலக்கரி பகுதியில் உள்ளன.  ஏற்கனவே MECL  நிறுவனத்தால் இந்த பகுதிகளில், 66 ஆழ்துளை கிணறுகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டதில்  சுமார் 463 அடியிலிருந்து 740 அடி ஆழத்தில் பழுப்பு நிலக்கரி படிவங்கள் சுமார் 755 மில்லியன் டன் அளவில் இருப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளதாக  அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. 



 

தற்போது அறிவிக்கப்பட்ட ஏலத்தில் தேர்வு பெறும் நிறுவனம் மேற்கண்ட பகுதியில் நிலக்கரி, நிலக்கரி படுகை மீத்தேன் மற்றும் நிலத்தடி நிலக்கரியை வாயு போன்ற எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அங்கு உள்ள கனிம வளத்தை எடுத்துக் கொள்ளலாம் என அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன.  இங்கு எந்தவொரு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்படாது என்று தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியுள்ளது. மேலும் நிலக்கரி படுகை மீத்தேன் திட்டத்திற்கு தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர்கள் கடந்த 2015 ம் ஆண்டில் பிறப்பித்த நிரந்தர தடையும் உள்ளது. முப்போகம் நெல், தென்னை உள்ளிட்ட பணப்பயிர்களை விளைவிக்கும் பல்லாயிரகணக்கான ஏக்கர்களை கொண்ட பிரதான விவசாயப் பகுதியான மேற்கண்ட பகுதிகளில் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம், விவசாயத்திற்கும், நில வளத்திற்கும், நிலத்தடி நீருக்கும் எதிரானது.மேற்கண்ட காரணத்திற்காக தமிழ்நாடு அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில்  இத்தகைய செயல்பாடுகளை மேற்கொள்ளக் கூடாது எனத் தடைவிதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் அழைப்பாணையில்   சொல்லப்பட்டுள்ள வடசேரி நிலக்கரி பகுதி முழுமையாகவும், சேத்தியாத்தோப்பு கிழக்கு நிலக்கரி பகுதியில் பல இடங்களும் பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்குள்  வருகிறது.  

 

மேலும்  இந்தியாவில் நிலக்கரி பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கையாக 2030 ம் ஆண்டுக்குள் மொத்த எரிசக்தியில் 50 சதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யவும்,2070 ஆம் ஆண்டு நிகர கார்பன் வெளியேற்றத்தை  0% ஆக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறும் சூழலில் அதிக நிலக்கரி சுரங்கங்களை ஏலத்திற்கு விடுவது முரணாக உள்ளது. மேலும் காவிரி டெல்டா பகுதியில் ஏலம் விடப்பட்டுள்ள நடவடிக்கை தமிழ்நாடு அரசின் பாதுகாப்பு மண்டல அரசாணைக்கு எதிராக உள்ளது. ஆகவே மத்திய அரசு உடனடியாக மேற்கண்ட அழைப்பாணையில் பாதுகாக்கப்பட்ட  வேளாண் மண்டலத்தில் உள்ள தமிழகப் பகுதிகளை விலக்கிக் கொள்ள வேண்டும்.

 

வேளாண் நிதிநிலை அறிக்கை மற்றும் அடுத்த 5 ஆண்டுகளில் வேளாண் மண்டலத்தில் 1000 கோடி முதலீட்டில் வேளாண் சார்ந்த தொழில்களை கொண்டுவருவதாக அறிவித்த தமிழ்நாடு அரசின் அறிவிப்பை வரவேற்பதோடு, நிலக்கரி ஏல அறிவிப்பு தொடர்பாக உடனடியாகத் தலையிட்டு மத்திய அரசின் நடவடிக்கைகள் அனைத்தையும்  நிறுத்தி வைப்பதை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்துகிறது என தெரிவித்தார்.