தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மத்திய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் கும்பகோணம் தொகுதி எம்எல்ஏ நேரில் மனு அளித்தார்.



தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மத்திய பேருந்து நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் அதற்கான கோரிக்கை மனுவை வழங்கினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 23ம் தேதி, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்துக்காக, செயல்படுத்தப்பட வேண்டிய 10 அம்சங்கள் அடங்கிய பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதன்படி  அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கும்பகோணம் தொகுதியில் பொதுமக்களின் நீண்டகால, மிக முக்கிய கோரிக்கைகளை ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளது. இதில், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு, புதிய வருவாய் மாவட்டம் அறிவிக்க வேண்டும். கும்பகோணம் பேருந்து நிலையத்துக்கு, நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கும்பகோணத்தில் புதிதாக இடம் தேர்வு செய்து, நிலம் கையகப்படுத்தி, அரசின் நிதியுதவியின் மூலம், மத்திய பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும்.





கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில், விடுபட்ட 26 ஊராட்சிகளுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட வேண்டும். அதே போல் தாராசுரம் பேரூராட்சி பகுதிகளுக்கும் போதிய குடிநீர் வசதி செய்து தர வேண்டும். கும்பகோணம் தொகுதியில் அரசினர் சட்டக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் ஆகியவை தொடங்க வேண்டும்.

கும்பகோணத்தில் கோயில்கள் அதிகமாக உள்ளதால், தேர்த்திருவிழா, தெப்பத்திருவிழா, மாசிமகப்பெருவிழா, கருட சேவைகள் உள்ளிட்ட பல திருவிழாக்கள் நடைபெறும் காலங்களில், தேரோடும் வீதிகளில் சுவாமி தேரில் வலம் வரும் காலங்களில், வீதிகளில் குறுக்கே அமைந்துள்ள மின் இணைப்புகளை அடிக்கடி துண்டிக்க வேண்டி உள்ளது. இதனால், வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த கும்பகோணத்தில்,  பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.





எனவே, தேரோடும் வீதிகளில் மின் இணைப்புகளை புதைவட மின் இணைப்புகளாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். கும்பகோணம் பழைய மீ்ன்மார்கெட்டை வணிக வளாகமாகவும், வெளியூர் பக்தர்கள் தங்கிச் செல்ல ஏதுவாக சாக்கோட்டை சாலையில் உள்ள நாகேஸ்வரன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்ட வேண்டும். திருநாகேஸ்வரத்தில் புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது உள்பட 10 முக்கிய கோரிக்கைகள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தமிழக முதல்வருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.