தஞ்சாவூர்: தஞ்சாவூர் திலகர் திடலில் தொழில் வர்த்தக சங்கம் நடத்தும் சிசிஐ டெல்டா வேளாண் மற்றும் உணவு கண்காட்சி இன்று முதல் பிரம்மாண்டமாக தொடங்கியது. வரும் 6ம் தேதி வரை இந்த கண்காட்சி நடக்கிறது.


தஞ்சாவூர் தொழில் வர்த்தக சங்கத்தில் பல்வேறு தொழில் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக செயல்பட்டு வருகின்றனர். விவசாயிகளின் நலன் கருதி அவர்களுக்கு தேவையான வேளாண் கருவிகள் மற்றும் சாகுபடி பொருட்களை மதிப்பு கூட்டி விற்பது தொடர்பான ஆலோசனைகள் பெறுவதற்காக சி சி ஐ டெல்டா வேளாண் மற்றும் உணவு கண்காட்சியை இன்று முதல் வரும் 6ம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை தஞ்சை திலகர் திடலில் நடத்துகிறது.


இந்த வேளாண் கண்காட்சியை திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் தொடக்கி வைத்தார். தஞ்சாவூர் தொழில் வர்த்தக சங்கம் தலைவர் மணிமாறன் வரவேற்ற்றார். தஞ்சாவூர் எம்.பி. முரசொலி, எம்எல்ஏ டி கே ஜி . நீலமேகம், மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, நிப்டம் இயக்குனர் பழனிமுத்து, என்ஆர்சிபி இயக்குனர் செல்வராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தொழில் வர்த்தக சங்க செயலாளர் ராஜ்குமார், கண்காட்சி கன்வீனர் டாக்டர் சிவா, டிரஸ்டி கணேசன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிசிஐ டெல்டா வேளாண் மற்றும் உணவு கண்காட்சி தலைவர் சுப்பிரமணியம் நன்றி கூறினார்.


இதுகுறித்து தஞ்சாவூர் தொழில் வர்த்தக சங்க தலைவர் மணிமாறன் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சை திலகர் திடலில் இன்று சிசிஐ டெல்டா வேளாண் மற்றும் உணவு கண்காட்சி தொடங்கி உள்ளது. இந்த கண்காட்சி வரும் 6ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக 120 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேளாண் கண்காட்சியில் விவசாயிகளுக்கு தேவையான இயந்திரங்கள் உட்பட பல்வேறு சாதனங்கள் காட்சிப்படுத்தப்படுகிறது. மேலும் இந்த வேளாண் கண்காட்சியின் போது சிறப்பு கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.


இதில் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது, சந்தைபடுத்துவது, அதற்கு என்ன செய்யலாம்? எவ்வாறு மதிப்பு கூட்டுவது, வாழையிலிருந்து என்னென்ன பொருட்களை பெற்று மதிப்பு கூட்டி விற்பனை செய்யலாம் என்பது உட்பட பல்வேறு தொழில் ட்பங்களை விவசாயிகள் அறிந்து கொள்வதற்காக கருத்தரங்குகள் நடக்கின்றன.


இந்த வேளாண் கண்காட்சி அரங்கில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டால்களில் விவசாயிகளுக்கு தேவையான பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. இந்த வேளாண் கண்காட்சிக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை தஞ்சாவூர் நிப்டம், தேசிய வாழை ஆராய்ச்சி மையம் மற்றும் கோயமுத்தூர் அக்ரிகல்ச்சர் யூனிவர்சிட்டி, சிதம்பரம் அண்ணாமலை யுனிவர்சிட்டி திருச்சி தனலட்சுமி ஸ்ரீனிவாசன் யூனிவர்சிட்டி, வல்லம் பெரியார் மணியம்மை இன்ஸ்டிடியூட், நாகப்பட்டினம் டாக்டர் ஜெ ஜெயலலிதா ஃபிஷரீஸ் யூனிவர்சிட்டி, சென்னை வெட்னரி அன்று அனிமல்ஸ் சயின்ஸ் யூனிவர்சிட்டி ஆகியவை வழங்குகின்றன. இதில் விவசாயிகள் பங்கேற்று தங்களின் சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.