CBSE 10th Exam: நாளை தேர்வு; இன்னும் வராத ஹால் டிக்கெட்- 10ஆம் வகுப்பு மாணவர்கள் கதறல்- அதிர்ச்சிப் பின்னணி!

எதிர்கால கல்வி குறித்து பெரும் கேள்விக்குறி விழுந்துள்ளது என்று வேதனையுடன் மாணவர்கள் தெரிவித்தனர்.

Continues below advertisement

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வை எழுத இயலாமல் தங்கள் கல்வியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதை நினைத்து 19 மாணவ, மாணவிகள் பெரும் கவலையில் உள்ளனர். நாளை தேர்வுகள் தொடங்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காடு பகுதியில் செயல்பட்டு வருகிறது தனியார் சிபிஎஸ்சி பள்ளி. இப்பள்ளி நிர்வாகம் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே நடத்துவதற்கு அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் பத்தாம் வகுப்பு வரை மாணவர்களை இப்பள்ளி நிர்வாகத்தினர் சேர்த்து கல்வி பயிற்றுவித்து வந்துள்ளனர். அவ்வாறு 10ம் வகுப்பில் 16 மாணவர்கள் மற்றும் 3 மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.

Continues below advertisement

இந்நிலையில் நாளை சிபிஎஸ்சி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்க உள்ளது. ஆனால் இந்த 19 மாணவ, மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வரவில்லை. இதுகுறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளி குறித்து விசாரித்து பார்த்த போது எட்டாம் வகுப்பு வரை மட்டுமே நடத்த அனுமதி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த 19 மாணவ, மாணவிகளும் தங்கள் பெற்றோருடன் இன்று காலை தஞ்சை மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்திற்கு வந்து சிபிஎஸ்சி அனுமதி இன்றி செயல்பட்ட பள்ளியில் தங்களது பிள்ளைகள் படித்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் நாளை பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்க உள்ள நிலையில் ஹால் டிக்கெட் வழங்கவில்லை என கோரிக்கை விடுத்தனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று தகவல் தெரிவிக்கும்படி கூறப்பட்டதால் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கும்பகோணத்தில் நடந்து வரும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளதால்  பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரச்னை குறித்து கேட்டறியப்பட்டது. தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தினர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அப்போது இப்பள்ளிக்கு 8ம் வகுப்பிற்கு சிபிஎஸ்சி அங்கீகாரம் இல்லாததும், இதன் காரணமாக நாளை 10ம் வகுப்பு தேர்வை எழுத முடியாத நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளதும் உறுதியாக தெரியவந்தது. 

தொடர்ந்து பெற்றோர்கள் கூறிய புகாரை ஆய்வு செய்த கல்வித்துறை அதிகாரிகள் வேறொரு பள்ளியில் மாற்றுச்சான்றிதழ் வாங்கி NIOS திட்டம் மூலம் தனியாக இந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வை வரும் மார்ச் மாதம் விண்ணப்பம் செய்து ஜூன் மாதம் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் மற்றும் கல்வித் தகுதி இருக்க வேண்டும். ஆனால் அப்பள்ளிக்கு 8ம் வகுப்பிற்கான சிபிஎஸ்சி தேர்வு சான்றிதழ் இல்லாததன் காரணமாக பதிவு செய்வது என்பதே ஒரு கேள்விக்குறியாக உள்ளது.

மேலும் 10 நாட்களுக்கு உள்ளாக எட்டாம் வகுப்பிற்கான அங்கீகாரச் சான்றிதழ் கிடைத்துவிடும். இதனை பயன்படுத்தி பதிவு செய்து ஏப்ரல் அல்லது ஜூன் மாதம் தேர்வு எழுத மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என பள்ளி நிர்வாகத்தின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அங்கீகாரம் கிடைக்காத நிலையில் வேறொரு பள்ளியில் எட்டாம் வகுப்பு சான்றிதழ் பெற்று இவர்கள் பத்தாம் வகுப்பிற்கான தேர்வு எழுத மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளது. இதனால் தங்கள் குழந்தைகளின் ஓராண்டு கால படிப்பு வீணாகி விட்டது. இந்தாண்டு தேர்வு எழுத செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர்.

எதிர்கால கல்வி குறித்து பெரும் கேள்விக்குறி விழுந்துள்ளது என்று வேதனையுடன் அந்த மாணவர்கள் தெரிவித்தனர்.

Continues below advertisement