தஞ்சாவூர்: தஞ்சாவூரில் சிபிஐ இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுவினர் முகாம் நடத்தி அசல் ஆவணங்களை பெற்றனர். எதற்காக தெரியுங்களா?
தஞ்சாவூர் தாசில்தார் பின்புறம் உள்ள அலுவலக கட்டிடத்தில் சென்னை கோர்ட் உத்தரவின் படி மத்திய பிரதேசத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் சிறுசேமிப்பு மற்றும் முதலீடு என்ற பெயரில் பொதுமக்களிடம் ரூ. 1500 கோடி மோசடி செய்தது தொடர்பான வழக்கில் அசல் ஆவணங்களை பெறும் முகாம் நடந்து வருகிறது.
மத்திய பிரதேசம் குவாலியர் பகுதியை சேர்ந்த பரிவார் டெய்ரீஸ் அண்ட் அல்லைட் லிமிடெட் மற்றும் பிடிஏ அறக்கட்டளை பெயரில் திரட்டப்பட்ட நிதி, வைப்புத் தொகைகள் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ வழக்குகளை பதிவு செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி மேற்கண்ட நிறுவனத்தில் பணம் செலுத்திய மக்களிடமிருந்து அசல் ஆவணங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி சிபிஐ அதிகாரிகள் கடந்த மே மாதம் முதல் சென்னை, திருத்தணி, காஞ்சிபுரம், பெரம்பலூர், தஞ்சாவூர், ஈரோடு, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் பணம் செலுத்தியதற்கான அசல் ஆவணங்களை சேகரித்து வருகின்றனர்.
அந்த வகையில் தஞ்சாவூரில் கடந்த 2ம் தேதி திங்கட்கிழமை முதல் மேற்கண்ட நிறுவனத்திடம் பணம் செலுத்திய முதலீட்டாளர்களிடம் இருந்து அசல் ஆவணங்களை வாங்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக சென்னையிலிருந்து சிபிஐ இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் வந்த குழுவினர் தஞ்சாவூர் தாசில்தார் அலுவலகம் பின்புறம் உள்ள கட்டிடத்தில் அசல் ஆவணங்களை வாங்கி அதை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆவணங்கள் பெறும் முகாம் தஞ்சாவூரில் வரும் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாள் தஞ்சாவூர் எஸ்.பி. அலுவலகத்தில் நடந்த முகாமில் நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் திரண்டு வந்து ஆவணங்களை கொடுத்தனர். இதேபோல் நேற்றும் ஏராளமான பொதுமக்கள் மேற்கண்ட நிறுவனத்திடம் தங்கள் செலுத்திய பணத்திற்குரிய ஆவணங்களை நேரடியாக கொண்டு வந்து செலுத்தினர். இந்த 12 நாட்கள் நடக்கும் முகாமில் மேற்கண்ட நிறுவனத்தில் பணம் சிறுசேமிப்பாகவும், முதலீடாகவும் செலுத்தியவர்கள் அசல் ஆவணங்களை கொண்டு வந்து கொடுத்து பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.