தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இருப்பினும் சில சமயங்களில் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கும் நிகழ்வு தள்ளிப்போகும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதுமான அளவு தண்ணீர் இருந்து வருவதால் 12 -ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு விடுகிறது. இந்த ஆண்டும் அணையில் போதிய தண்ணீர் இருப்பதால், உரிய காலமான ஜூன் 12 -ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.




அதனைத் தொடர்ந்து சேலத்தில் கடந்த 2 நாட்களாக முகாமிட்டிருந்த முதல்வர், மேட்டூர் அணையில் ஜீன் 12-ம் தேதி காலை நடந்த தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று, பிரதான மதகுகளில் ஷட்டர்களை இயக்கி அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். அணையில் இருந்து சீறிப் பாய்ந்து வெளியேறிய தண்ணீரில் முதலமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் மலர்களை தூவி வரவேற்றார். மேட்டூர் அணையில் இருந்து முதல்கட்டமாக 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. மாலையில் 10 ஆயிரம் கனஅடியாக படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இது தொடர்ந்து 2024 ஜனவரி 28-ம் தேதி வரை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.




இதன்மூலம் டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம், 7 கதவணைகளில் மின் உற்பத்தியும் தொடங்கியது. கடந்த மூன்று ஆண்டுகளாக உரிய நேரத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Ashes Test: அன்று கில்.. இன்று ராபின்சன்.. ஏமாத்துறதுதான் வேலையா..? ஆஸ்திரேலியாவை விளாசும் நெட்டிசன்கள்..!




இந்நிலையில், மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் நேற்றிரவு இரவு கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையான முதல் கதவணை உள்ள திருவாலங்காடு காவிரி, விக்ரமன் ஆறுகளின் தலைப்பு பகுதியில் உள்ள நீர் தேக்கிக்கு தண்ணீர் வந்தடைந்தது. அதனை அடுத்து இன்று அதிகாலை 3 மணி அளவில் பொதுப்பணித்துறையினர் 782 கன அடி நீரை பாசனத்திற்காக திறந்து விட்டனர். மேட்டூர் அணையின் விதிகளின் படி, காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகாருக்கு முன்னதாக, மேலையூர் கடைமடை கதவணை பகுதிக்கு காவிரி நீர் சென்று சேர்ந்த பின்னர், மற்ற கிளை ஆறுகள், வாய்க்கால்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படும். 




இதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்னும் ஓரிரு தினங்களில், தண்ணீர் பாசனத்திற்காக பகிர்ந்து அளிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிகழாண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் 92 ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பளவில் குறுவை பயிர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் காவிரி நீரால் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.