திருவாரூர் அருகே உள்ள காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் 7000 சதுர அடி பரப்பளவில் 12 கோடி மதிப்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கிறது. இந்த கலைஞர் கோட்டத்தினை துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்து பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுகிறார்.
இந்த நிகழ்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நள்ளிரவு திருவாரூருக்கு வருகை தந்து சன்னதி தெருவில் உள்ள உறவினர் வீட்டில் தங்கினார். தொடர்ந்து இன்று காலை கலைஞர் கோட்டத்தினை அவர் பார்வையிட்டார். மேலும் மாநாடு நடைபெறும் இடத்தையும் அதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து விளமல் பகுதியில் உள்ள ஓடம்போக்கி ஆற்றில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளையும் முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்று மாலை காட்டூர் பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு அங்கிருந்து நடந்து கலைஞர் கோட்டத்திற்கு வந்தார். அப்போது சாலையின் இரு புறத்திலும் பொதுமக்கள் அவரை பார்ப்பதற்காக காத்திருந்தனர். இந்த நிலையில் காட்டூர் அருகில் உள்ள பவித்திர மாணிக்கம் காமராஜர் தெரு பகுதியை சேர்ந்த விவசாயி சக்திவேல் என்பவரின் மகள் காவ்யா என்பவர் நடந்து வந்த முதல்வரிடம் ஓடிச் சென்று நலம் விசாரித்தார். பதிலுக்கு அவரும் ’நீ என்ன வகுப்பு படிக்கிறாய் நன்றாக படிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து மாணவி காவியா கூறுகையில், “அவரது பாட்டி சமாதிக்கு சென்று விட்டு முதல்வர் நடந்து வந்த போது நான் சென்று அவரிடம் கை கொடுப்பதற்காக சென்றேன். அவரிடம் நல்லா இருக்கீங்களா என்று நலம் விசாரித்தேன். அவரும் என்ன படிக்கிறாய் எங்கு படிக்கிறாய் என்று கேட்டு விட்டு நன்றாக படிக்க வேண்டும்” என்று கூறினார். எப்போதும் அவர் எங்கள் ஊருக்கு வரும்போது நான் பார்த்திருக்கிறேன் இந்த முறை அவரிடம் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.