தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விடாத கர்நாடகா அரசை கண்டித்து, காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் போராட்டத்திற்கு ஆதரவாக நாகையில் வர்த்தகர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டதால் நாகை, நாகூர், வேளாங்கண்ணி வெறிச்சோடியது.

 

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து இன்று நாகை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்துவது என காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு ஆதரவாக நாகை மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வர்த்தகர்கள் இன்று முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாகை, நாகூர், வேளாங்கண்ணி, வேதாரண்யம், கீழ்வேளூர், கீழையூர், திருமருகல், திருக்குவளை,திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அங்கு அடைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

 

இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடத்தப்படும் இந்த கடையடைப்பு போராட்டம் என்பது வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும், இதற்கு மேலாவது விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களின் நலன் கருதி கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய உரிய நீரை வழங்க வேண்டும் என நாகை வர்த்தகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



 

வியாபாரத்திற்கு ஆதாரமே விவசாயம் என வலியுறுத்தியுள்ள காவிரி தனபாலன் உற்பத்தி குறைந்ததால் டெல்டா மாவட்டங்களில் வர்த்தகர்கள் மற்றும் மக்களிடையே பணப்புழக்கம் குறைந்துள்ளதாகவும், எனவே உணவு உற்பத்தியில் கை வைக்கும் கர்நாடக அரசு மீது நீதிமன்றம் அவமதிப்பு தன் வழக்கு தொடுக்க வேண்டும், கர்நாடகத்தில் உள்ள அனைத்து அணைகளையும் ஆணையம் தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டு கிடைக்கக்கூடிய தண்ணீரின் அடிப்படையில் அன்றைக்கு பிரித்து வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தி உள்ளார்.