தஞ்சாவூர்: தமிழகத்திற்கு உரிய அளவு காவிரி நீரை உடனடியாக திறந்து விட வேண்டும். தண்ணீர் திறந்து விட எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய பா.ஜ.க அரசு மற்றும் கர்நாடக அரசை கண்டித்து இன்று டெல்டா மாவட்டங்களில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.


இதை ஒட்டி தஞ்சை மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் கடையடைப்பு நடந்தது. தஞ்சை நகரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. வழக்கம் போல் பஸ்கள் இயங்கினாலும், குறைவான எண்ணிக்கையில்தான் இயக்கப்பட்டன. பயணிகள் எண்ணிக்கையும் குறைந்தே காணப்பட்டது. பரபரப்பாக காணப்படும் தஞ்சை பழைய பஸ்ஸ்டாண்ட் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. பால் விற்பனை நிலையம், மருந்தகங்கள் மட்டும் இயங்கின. 


தஞ்சையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன், செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் வக்கீல் கோ. அன்பரசன் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், இயக்கத்தினர், தொழில் சங்கத்தினர் உள்பட ஏராளமானோர் திரண்டனர். 


பின்னர் காவிரியில் உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாக வந்தனர். தஞ்சை காந்திஜி ரோடு எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி நீர் திறந்திட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.  இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.




போராட்டத்தில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், துணை செயலாளர் கனகவல்லிபாலாஜி, முன்னாள் கவுன்சிலர் சதாசிவம், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் மோகன்ராஜ், வயலூர் ராமநாதன்,  இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி, துணை செயலாளர் சக்திவேல், பொருளாளர் பாலசுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாவட்ட செயலாளர் நீலமேகம், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் ஜெயசங்கர், முன்னாள் மாவட்ட செயலாளர் சொக்காராவி, ம.தி.மு.க. மாவட்டசெயலாளர் தமிழ்செல்வன், மாநகர செயலாளர் துரைசிங்கம், வணிகர் சங்கங்களின் பேரவை  மாவட்ட தலைவர் புண்ணியமூர்த்தி, செயலாளர் முருகேசன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் சூரியகுமார், மாநகர அமைப்பாளர் ஜெயக்குமார், அண்ணா திராவிடர் மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், விடுதலை தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் முகிலன், ஏ.ஐ.டி.யூ.சி தேசிய நிர்வாகக்குழு சந்திரகுமார், மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், மாவட்ட தலைவர் சேவையா, சி.ஐ.டி.யூ மாவட்ட துணை செயலாளர் அன்பு, மக்கள் அதிகாரம் காளியப்பன், தாளாண்மை உழவர் இயக்கம் திருநாவுக்கரசு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தஞ்சை அருகே வல்லத்திலும் அனைத்து வணிகர்களும் தங்கள் கடைகளை அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர். மேலும் வல்லம் தபால் நிலையத்தை திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விவசாய சங்கத்தினர் உட்பட பல்வேறு  கட்சிகளை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக சென்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். கர்நாடக மற்றும் மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்திற்கு உரிய தண்ணீரை காவிரியில் திறந்துவிட வலியுறுத்தியும் கோஷமிட்டனர். 


இதில் தஞ்சை ஒன்றிய துணைத்தலைவர் அருளானந்தசாமி, வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் மகாலட்சுமி வெங்கடேசன், கவுன்சிலர்கள் சிங்.ரா.அன்பழகன், ரெளலத்நிஷா முகம்மது ஷாஃபி,மதிமுக ஒன்றிய‌ செயலாளர் மாணிக்கவாசகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் அபிமன்யூ, இந்திய‌ யூனியன் முஸ்லிம் லீக் பஷீர் அகமது மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வல்லம் டிஎஸ்பி நித்யா தலைமையில் ஏராளமான  போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். தஞ்சை மாவட்டம் முழுவதும் நடந்த கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டத்தில் 1063 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.