தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த ஆறு மாத காலமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும், மாட்டுவண்டி தொழிலாளர்கள் குடும்பங்களை பாதுகாத்திட பட்டுக்கோட்டை தாலுகா தொக்காலிக்காடு, சின்ன ஆவுடையார் கோவில், பேராவூரணி தாலுகா பெத்தனாட்சிவயல் ஆகிய இடங்களில் மணல் குவாரியை திறக்க வலியுறுத்தி சிஐடியு தஞ்சை மாவட்ட மணல் மாட்டுவண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாட்டு வண்டிகளுடன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஜெயபால் தலைமை வகித்தார். முறைசாரா சங்க மாவட்ட செயலாளர் பேர்நீதிஆழ்வார் முன்னிலை வகித்தார். மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்செல்வி வாழ்த்திப் பேசினார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் பட்டுக்கோட்டை கந்தசாமி, பேராவூரணி குமாரசாமி மற்றும் 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். காத்திருப்பு போராட்டத்தில், பட்டுக்கோட்டை தாலுகா தொக்காலிக்காடு, சின்ன ஆவுடையார் கோவல் ஆகிய இடங்களில் இயங்கி வந்த மணல் குவாரியை மீண்டும் திறக்க வேண்டும்.
பேராவூரணி தாலுகா பெத்தனாட்சிவயல் அம்புலி ஆற்றில், மாட்டு வண்டியில் மட்டும் மணல் எடுக்க தேர்வு தேர்வு செய்யப்பட்ட புதிய மணல் குவாரிகளை திறக்க வேண்டும். லாரி, டிப்பர், டாரஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களில் நடைபெறுகின்ற மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். பிழைப்புக்காக மாட்டு வண்டியில் மணல் அள்ளும் ஏழைத் தொழிலாளர்களின் மீது வழக்குப் போடுவது, கைது செய்து சிறையில் அடைப்பது, வண்டி மாடுகளை பறிமுதல் செய்வது போன்ற இரக்கமற்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
மாடுகளை பிடித்து அடைத்து வைத்து பட்டினி போட்டு கொல்லக் கூடாது. மாட்டுவண்டி தொழிலார்களுக்கு என தனியாக நல வாரியம் அமைத்து, அடையாள அட்டை வழங்க வேண்டும். போலி மாட்டுவண்டி பதிவுகளை ரத்து செய்ய வேண்டும், மாட்டு வண்டித்தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்களுடன் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் ஒரு வார கால அவகாசத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்ததை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது. குவாரியை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாடுகளுடன், மாட்டு வண்டிகளை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெறும் என மாட்டுவண்டி தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
முன்னதாக தொழிற்சங்க அலுவலகத்தில், இருந்து மாட்டு வண்டிகள் முன்செல்ல, 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது