தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும். வழக்கமாக 2 நாட்கள் சதய விழா கொண்டாடப்படும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் 1 நாள் விழாவாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து இந்தாண்டும் கொரோனா பரவலால் 1 நாள் விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தஞ்சையில் மாமன்னன் ராஜராஜ சோழன் 1036 ஆவது சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் முதல் நிகழ்ச்சியாக காலை 6.30 மணிக்கு பெரிய கோவிலில் டி.கே.எஸ். பத்மநாபன் குழுவினரின் மங்கள இசை நடைபெற்றது. அதை தொடர்ந்து 7 மணிக்கு கோவில் ஊழியர்களுக்கு புத்தாடைகளை கட்டளை தம்பிரான் சுவாமிகள் வழங்கினார்.
பின்னர் தேவாரம் நூலுக்கு ஓதுவார்கள் சிறப்பு பூஜைகள் செய்து கோவிலின் உள் பிரகாரத்தில் ஊர்வலமாக வந்து நந்தி மண்டபம் அருகே அமர்ந்து தமிழில் பாராயணத்தை பாடினர். முன்னதாக கோவில் வளாகத்தில் யானையில் வைத்து திருமுறை வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தமிழில் பாடிய பாராயணத்தை கேட்டு ரசித்தனர். இதனை தொடர்ந்து மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதையடுத்து பெருவுடையார், பெரியநாயகி திருமேனிகளுக்கு கட்டளை தம்பிரான் சுவாமிகள் தலைமையில் சந்தனம், மஞ்சள், மூலிகைகள், வில்வஇலை, விபூதி, இளநீர், பசும்பால், தயிர், நெய், பஞ்சாமிர்தம், அன்னம் உள்ளிட்ட 48 வகையான திரவியங்களால் பேரபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் பெருவுடையார்- பெரியநாயகி திருமேனிகளுக்கு பெருந்தீப வழிபாடு நடைபெற்றது. மாலை 6 மணிக்கு கலைமாமணி பண்ணிசை பேரறிஞர்கள் திருமுறைக் கலாநிதிகள் பழனி சண்முகசுந்தர தேசிகர், கரூர் குமார சாமிநாத தேசிகர் குழுவினர்களின் தேவார இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது . அதனைத் தொடர்ந்து கோவில் உள்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை சதய விழா குழு தலைவர் து.செல்வம், துணை தலைவர் மேத்தா, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, செயல் அலுவலர் கிருஷ்ணன், கண்காணிப்பாளர் ரெங்கராஜ் மற்றும் பலர் செய்திருந்தனர்.
அதை தொடர்ந்து தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில துணைத்தலைவர் கருப்பு. முருகானந்தம் தலைமையில் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கு.தங்கமுத்து நினைவு அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் டாக்டர் தங்க. கண்ணன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து தஞ்சையில் மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது ராஜராஜசோழனின் நெற்றியில் திலகம் இல்லாததால், அவர் வைத்தார். பின்னர் இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறுகையில், சதய விழாவையொட்டி சிவபுராணம் பாடி மாமன்னன் ராஜராஜசோழனுக்கு வழிபாடு செய்யப்பட்டது. ராஜராஜசோழன் சாதி மதத்துக்கு அப்பாற்பட்டவர். சோழர்களின் காலம் பொற்காலம். ஒரு தலைசிறந்த குடியரசு, முடியரசு எப்படி இருக்க வேண்டுமோ அதற்கு இலக்கணம் வகுத்தவர் ராஜராஜசோழன். அவருடைய ஆட்சிக் காலத்தில் நமது நாடு உலகத்திலேயே பணக்கார நாடாக இருந்தது. அதிக அளவில் வர்த்தகம் நடைபெற்றது.
ஆனால் அவர் குறித்து இப்போது அவதூறு பரப்பும் முயற்சியில் திரைப்பட இயக்குனர் ரஞ்சித் ஈடுபட்டுள்ளார். அவர் கடந்த முறை பேசும் போது பட்டியல் இன மக்கள், தலித் மக்கள் நிலம் பறிமுதல் செய்யப்பட்டது. பெண்கள் தாசிகளாக நடத்தப்பட்டனர் என்று மிக தவறாக, அவதூறு பரப்பும் வகையில் ஒரு கருத்தை கூறினார். இதனால் தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த கால அ.தி.மு.க. அரசு அவர் மீது வழக்குப்பதிவு செய்தது. ஆனால் இப்போது தான் பேசியது வரலாற்று குறிப்பு என்று கூறி மனுவை சமர்ப்பித்து அவர் மீதான வழக்கை ரத்து செய்யப்பட்டு உள்ளது. வரலாற்று ஆய்வாளர்கள் மாமன்னன் ராஜராஜன் ஆட்சி காலத்தில் சாதி ஏற்ற தாழ்வு கிடையாது. அனைத்து சமுதாயத்தினருக்கும் மரியாதை கொடுக்கப்பட்டது. ஏழை, எளிய மக்களுக்கு நிலங்களை வழங்கியவர் என்ற உண்மைகளை பதிவு செய்து உள்ளனர். ஆனால் நீதிமன்றம் இதனை கருத்தில் கொள்ளலாமல் வழக்கை ரத்து செய்த இருப்பது வேதனை அளிக்கிறது. தமிழக அரசு இந்த வழக்கை உடனடியாக மேல்முறையீடு செய்து ராஜராஜன் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை துடைக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் கன மழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சென்னையில் வசிக்கும் மக்களுக்கு குடும்ப அட்டைதாரருக்கு 3 ஆயிரம் வழங்க வேண்டும். மழைநீர் வடிவதற்கு ஏற்பாடுகளை செய்யவேண்டும். டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் சேதம் அடைந்தரர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்வதற்கான தேதியை இன்னும் 15 நாட்கள் நீட்டிக்க வேண்டும். பயிர் சேதத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மத்திய அரசும், தமிழக அரசும் மேற்கொள்ளுகின்ற வெள்ள நிவார ணபணிகளுக்கு உரிய நிதி ஒதுக்கி தமிழக மக்களை காக்க வேண்டும்.
திருவள்ளுவரை ஒரு மதத்தை சார்ந்தவராக சித்தரித்து வருகிறார்கள். திருவள்ளுவர், ராஜராஜ சோழன் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவர்கள். ஆனால் வேண்டும் என்று உள்நோக்கத்தோடு வரதலாற்றை திருத்துகின்ற இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் நாங்கள் வள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி கேட்டு இருந்தோம். ஆனால் அரசு தடை விதித்துள்ளது. அதனை நாங்கள் ஏற்று உடையாளூரில் உள்ள ராஜராஜசோழன் சமாதிக்கு சென்று மரியாதை செலுத்த உள்ளோம். அங்கு அவருக்கு கோவில் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம். அரசும் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். பின்னர், கும்பகோணத்தை அடுத்த உடையாளூரிலுள்ள ராஜராஜசோழன் என்றழைக்கப்படும் லிங்கத்திற்கு, கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், இந்து மக்கள் கட்சி நிறுவனர்தலைவர் அர்ஜூன்சம்பத், சிதம்பரம் மன்னர் பரம்பரையினர், நாம் தமிழக் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.