ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விவசாயத்திற்கு தேவையான உரங்கள் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜுன் 12 ம் தேதியான இன்று மேட்டூரில் டெல்டா பாசனத்திற்கு காவிரி தண்ணீரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனையடுத்து காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விவசாயத்துக்குத் தேவையான குறுகியகால நெல் ரகங்கள் வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 3500 மெட்ரிக் டன் விதைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 3000 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், யூரியா, டிஏபி, பாஸ்பேட் போன்ற உரங்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளதாகவும், உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவை போன்றவையும் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
நாற்றங்கால் இல்லாத பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு, நாற்றங்கால் உள்ள பகுதியில் உள்ள விவசாயிகள் சமுதாய நாற்றங்கால் அமைத்து நாற்றுகளை உற்பத்தி செய்து அவர்களுக்கு வழங்கி இதனை வேளாண்மை துறை மூலம் நாங்கள் கண்காணித்து வருகின்றனர். மேலும் ஒருங்கிணைந்த நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவைக்கான இலக்காக 3 லட்சம் ஏக்கர் பகுதியில் விரைவாக சாகுபடி பணிகளை மேற்கொள்ள ஏதுவாக இந்த சமுதாய நாற்றங்கால் அமைத்து மற்ற விவசாயிகளுக்கு இந்த நாற்றுக்களை தரும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. DAP தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக 700 ரூபாய் விலையை ஏற்றின. ஆனால் இதில் மத்திய அரசு தலையிட்டு பழைய விலையான 1200 ரூபாய்க்கே விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் அந்த கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உரக்கடைகளில் இந்த திருத்தப்பட்ட விலையில் உரம் விற்பனை நடைபெறுகிறுதா என நாகப்பட்டினம் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு), குத்தாலம் வேளாண்மை உதவி இயக்குநர் , சீர்காழி வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் செம்பனார்கோவில் வேளாண்மை உதவி இயக்குநர் ஆகியோர் கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் செம்பனார்கோவில், குத்தாலம் மற்றும் சீர்காழி வட்டாரங்களில் DAP உரத்தினை விற்பனை விலைக்கு கூடுதலாக விற்பனை செய்த மூன்று உரக்கடைகளில் நிர்ணயித்த விலையில் கூடுதல் விலைக்கு டிஏபி உரம் விற்றதால் 15 நாட்கள் உர விற்பனைக்கு தடை விதித்துள்ளனர்.
மேலும் அனைத்து உர சில்லரை விற்பனையாளர்களும் DAP உரத்தினை 1200 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும். விற்பனை விலையினை தகவல் பலகையில் குறிப்பிட வேண்டும். மேலும் விவசாயிகளிடம் இருந்து அதிக விலைக்கு, உரம் விற்பனை செய்வதாக புகார்கள் வரப்பெற்றால், உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-இன் படி தண்டனை வழங்கப்படுவதுடன், உர விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா எச்சரித்துள்ளார்.