புதுக்கோட்டை மாவட்டத்தில் எண்ணெய்க் கிணறு அமைக்க விடப்பட்டுள்ள டெண்டரை ரத்து செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. 





 

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால், உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஓஎன்ஜிசி நிறுவனம் விளைநிலங்களில் குழாய் பதித்து கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக திருவாரூர் நாகப்பட்டினம் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாய நிலங்களுக்கு அடியில் குழாய் பதித்து கச்சா எண்ணெய் எடுக்கும் பணியில் ஓஎன்ஜிசி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கச்சா எண்ணெய் செல்லும் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், உடனடியாக விளைநிலங்களில் குழாய் பதிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், மேலும் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், எனவும் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

 

குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் புதிய எண்ணெய் கிணறு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு மாத காலமாக அந்த பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததன் அடிப்படையில், அந்தப் பணிக்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதற்கு விவசாயிகள் மிகுந்த வரவேற்பை தெரிவித்தனர். மேலும் டெல்டா மாவட்டங்களில் புதியதாக எண்ணெய் கிணறுகள் அமைக்க முடியாது எனவும் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.



இந்நிலையில் மத்திய எரிசக்தி இயக்குனரகம் சார்பாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த 10ஆம் தேதி சிறு மற்றும் நடுத்தர வகை எண்ணெய் கிணறுகளுக்கான சர்வதேச டெண்டரை தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் 75 இடங்களுக்கான இந்த சுற்றில் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பகுதியிலும் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோரப் பகுதிகளையும் உள்ளடக்கி உள்ளது.

 

கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மத்திய அரசால் புதிய எண்ணை எடுப்பு கொள்கை(Hydrocarbon exploration licensing policy) அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா நிறுவனங்கள், கச்சா எண்ணெய் எடுக்க கையகப்படுத்திய பகுதிகளில் ஆய்வின்போது வணிகரீதியாக சாத்தியமில்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்ட, சிறு மற்றும் நடுத்தர எண்ணெய் வயல்களை சர்வதேச அளவில் ஏலம் விட முடிவு செய்யப்பட்டு, ஏற்கனவே இரண்டு சுற்று ஏலம் முடிவடைந்துள்ளது.



இதன் முதல் சுற்றில் தமிழகத்தின் நெடுவாசல் மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்தின் காரைக்கால் பகுதியில் இருந்தது ஏற்கனவே கச்சா எண்ணெய்க்காக கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த பகுதியில் Help கொள்கை மூலம் ஒற்றை அனுமதி என்கிற பெயரில் கச்சா எண்ணை அனுமதியுடன் மீத்தேன், ஷேல் கேஸ், டைட் கேஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான எண்ணெய் மற்றும் எரிபொருட்களை எடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டது. இதன் காரணமாக நெடுவாசல் பகுதியில் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அந்த பகுதியை ஏலம் எடுத்த எண்ணெய் எடுக்கும் பணியில் முன் அனுபவம் இல்லாத ஜெம் லேபாரட்டரி நிறுவனம், வேலைகளை தொடங்க தமிழக அரசு தடை விதித்தது. அதுபோல் புதுச்சேரி அரசும் தடை விதித்தது.

 

இத்தகைய சூழலில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரம்பக்குடி வட்டத்தில் நெடுவாசல் அருகே உள்ள வடத்தெரு பகுதியிலும், மேலும் பவளப்பாறைகள் அதிகம் உள்ள மன்னார் வளைகுடா பகுதியில் கச்சா எண்ணெய் எடுக்க அனுமதி பெற்று சாத்தியமில்லா சூழலில், ஓஎன்ஜிசி நிறுவனத்தால் கைவிடப்பட்ட பகுதிகளில் பிராக்கிங் உள்ளிட்ட நில மற்றும் நீர் வளத்திற்கு ஆபத்தான முறைகளை கையாள அனுமதிக்கப்பட்ட புதிய முறையில் ஏலம் விடப்பட்டுள்ளது. உடனடியாக ஏலத்திலிருந்து புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை விடுவிக்க வேண்டுமென மத்திய அரசை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இந்த ஏல அறிவிப்பு விவசாயிகளுக்கு எதிரான அறிவிப்பு ஆகும். இந்த விஷயத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் சேதுராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.