மனிதர்களால் கிட்டத்தட்ட 20 ஹெர்ட்ஸ் முதல் 20000 ஹெர்ட்ஸ் வரை அதிர்வெண் உள்ள ஒலி அலையை கேட்க முடியும். இதில் குறைந்த அதிர்வெண் உள்ள ஒலியானது குறைந்த சுருதியும் அதிக அதிர்வெண் உள்ள ஒலியானது அதிக சுருதியும் கேட்கும். வாகனங்களில் ஒலி எழுப்பும் ஹார்ன் சத்தமானது, அதை கேட்பவா் ஒருவரையொருவர் நெருங்கும் போது ஒலியின் அதிர்வெண் குறிப்பிட்ட அளவில் தோன்றும். வாகனங்கள் நெருங்கி வரும்போது உச்சஸ்தாயில் ஒலி கேட்கும். இவை ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்லும்போது, ஒலியின் அதிர்வெண் தோன்றும். அதனால் பேருந்து விலகிச் செல்லும்போது குறைந்த அளவில் கேட்கும். இந்த விளைவுக்கு டாப்ளர் விளைவு என்று பெயா். ஹாரனும் கேட்பவரும் ஒரே வாகனத்திலிருந்தால் இரண்டும் ஒரே வேகத்தில் செல்வதால் ஒலியின் அதிர்வெண் மாற்றமில்லாமல் தோன்றும்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் பொது மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் கனரக, பஸ்சுகள், இலகு ரக வாகனங்கள் அனைத்தும் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரனை பொருத்தி, பயன்படுத்தி வந்தனர். இதனால் பஸ் நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் வாகனங்களில் ஏர் ஹாரனை அதிக சத்தத்துடன் எழுப்புவதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து விபத்துக்குள்ளாகி விடுகின்றனர். முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர்.
இதனால் நாளுக்கு நாள் வாகனங்களில் ஏர் ஹாரன் தொல்லை அதிகரித்ததால், கும்பகோணம் ஆர்டிஒ அலுவலகத்திற்கு பொது மக்கள் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் மற்றும் அலுவலர்கள், கும்பகோணம் பஸ் நிலையம் முன்பு திடிரென ஏர் ஹாரனை பொருத்தி வரும் வாகனத்தை ஆய்வு செய்தனர். இதில் அதிக ஒலி எழுப்பும் வகையில் இருந்த ஏர் ஹாரனை கழற்றி, அதே வாகனத்தின் கீழே வைத்து உடைத்து, வாகனத்திற்கு அபராதம் விதித்தனர்.
இதில் அரசு மற்றும் தனியார் இரண்டு பஸ்சுகளுக்கு புதுப்பிக்கும் உரிமத்தை ரத்து செய்தும், மூன்று பஸ்சுகளுக்கு தரச்சான்றுகளை ஒப்படைக்குமாறும், மேலும். 5 பஸ்சுகளுக்கு 60 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில்,கடந்த சில வருடங்களுக்கு முன்பு, தமிழகத்தில், வாகனங்களில் ஏர் ஹாரன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசின் உத்தரவை வாகன ஒட்டிகள் மதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் கூறுகையில், கும்பகோணம் பகுதிகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரனை பயன்படுத்தி வருவதாக வந்த தகவலையடுத்து, கும்பகோணம் பஸ் நிலையில், பாலக்கரை, நாகேஸ்வரன் கோயில் வடக்கு வீதி, காந்தி பூங்கா, நால்ரோடு, மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென ஆய்வு செய்து சுமார் 50 க்கும் மேற்பட்ட வாகனங்களிலிருந்து ஹாரனை கழற்றி அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் டிரைவர்கள், நடத்துனர்கள், பயணிகள் என அனைவரும் முககவசம் அணிந்துள்ளார்களா என ஆய்வு செய்யப்பட்டு, அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும், தவறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றார்.