தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில், செவிலியரின் அலட்சியத்தால், பிறந்த 14 நாட்களே ஆன பெண் குழந்தையின் கட்டை விரல் துண்டானதாக வெளியான தகவல் தொடர்பாக உரிய விசாரணைக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் அருகே காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(34), விவசாயக் கூலி தொழிலாளி. இவருக்கும் பிரியதர்ஷினி(20), என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணமான நிலையில், கருவுற்று இருந்த ப்ரியதர்ஷினிக்கு 9-வது மாதத்தில், கடந்த 25-ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. குறை மாதத்தில் குழந்தை பிறந்ததால், அதற்கு வயிற்றில் கோளாறு இருப்பதாகவும், எனவே, தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, குழந்தையின் இடது கையில் மருந்து ஏற்றும் சாதனம் (வென்பிளான்) வழியாக, குழந்தைக்கு ஊசி மருந்து வழங்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தை கை அசையாமல் இருக்கவும், ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இந்நிலையில், குழந்தை சற்று ஆரோக்கியமாக இருப்பதால், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் செய்வதற்காக, குழந்தையின் கையில் உள்ள வென்பிளானை அகற்றி எடுப்பதற்காக, செவிலியர் ஒருவர் கத்தரிக்கோலால் நறுக்கும்போது, குழந்தையின் கட்டை விரல் துண்டாகியதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தையின் கையில் இருந்து ரத்தம் வந்ததை கண்ட தாய் பிரியதர்ஷினி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, செவிலியர், டாக்டர்களுக்கு தகவல் கொடுத்து, குழந்தையின் கையில் மீண்டும் தையல் போட்டுள்ளனர்.
இதுகுறித்து குழந்தையின் தந்தை கணேசன் கூறியதாவது: எனது குழந்தைக்கு ஏற்பட்ட நிகழ்வு வருங்காலத்தில் யாருக்கும் நிகழக்கூடாது. சம்மந்தப்பட்ட செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தையின் நிலை குறித்து தெளிவாக டாக்டர்கள் கூற வேண்டும் என்றார்.
இதுதொடர்பாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி முதல்வர் வ.ரவிக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குழந்தைக்கு ஏற்றப்பட்ட டிரிப் லையனை பிரிக்கும் போது, குழந்தை கையை அசைத்து இருக்கலாம். அதனால், பெருவிரலின் நுனிபாகம் துண்டாகிவிட்டது. உடனே குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர், தையல் போட்டு இருக்கிறார். இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட செவிலியர் மனஉளைச்சலில் தற்போது வேலைக்கு வரவில்லை. வந்தவுடன், விசாரணை நடத்தப்பட்டு, தவறு இருந்தால், அவர் மீது நிச்சயமாக அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். செவிலியரின் அலட்சிய போக்கா என்பது விசாரணைக்கு பின் தெரிய வரும். சின்ன குழந்தை என்பதால் விரல் இணைய வாய்ப்பு இருக்கிறது. இப்போது தையலை பிரித்து பார்க்க முடியாது. எலும்பில் எந்தவித பாதிப்பும் இல்லை. சதை மட்டுமே துண்டிக்கப்பட்டு இருக்கிறது என்றார்.
இந்த விவகாரம் நேற்று தமிழ்நாட்டில் பேரதிர்வை ஏற்படுத்திய நிலையில், பலரும் தங்களின் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.