மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா சாகுபடி சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட்டிருந்தது. அதன் அறுவடை பணிகள் நடைபெற்ற நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை கொள்முதல் செய்ய மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 165 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
இந்த நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து இதுவரை 2 லட்சத்தி 10 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. சம்பா சாகுபடி அறுவடைகள் முடிந்த நிலையில் தற்போது விவசாயிகள் உளுந்து பயிறு அறுவடையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா அறுவடைகள் முடிவடைந்து. விவசாயிகள் நெல் அனைத்தும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விறப்பனை செய்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 16 ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
ஆனால், மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்லாததால் திறந்த வெளியிலேயே சுமார் 64000 டன் தேங்கிக் கிடக்கிறது. மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி, மணக்குடி, தில்லையாடி, வில்லியநல்லூர், வழுவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன.
இந்த நிலையில் தற்போது கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையில் நெல் மூட்டைகள் நானே தொடங்கி பாதித்து சேதமடைந்து வருகிறது. இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை கிடங்குக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது குறித்து இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஒவ்வொரு முறையும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை உரிய முறையில் பாதுகாக்காமல் திறந்தவெளியில் அடுக்கிவைத்து மழையில் நனைவதும், அதனை நனையாமல் பாதுகாப்பதற்கு உரிய தார்ப்பாய் கூட தயாராக வைத்துக்கொள்வது இல்லை என்றும், இதனால் ஒவ்வொரு மழையிலும் பல லட்சம் டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு, அரசுக்கு வருவாய் பற்றாக்குறை உள்ள இந்த சூழலில் அரசு பணம் இவ்வாறு வீணாவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.