திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அரசு திறந்தவெளி கிடங்கில் 50 ஆயிரம் மூட்டை நெல் மணிகள் மழையில் நனைந்து சேதம். மன்னார்குடி அருகே வாய்க்கால் கரை உடைப்பால் சுமார் 5000 ஏக்கர் சம்பா நெல் பயிர் மழை நீரில் மூழ்கியது.
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக அதிக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எதிர்பார்த்ததை விட சற்று வடக்கு திசையை நோக்கி நகர்ந்து மகாபலிபுரம் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கிய மழை இன்று காலை வரை கொட்டித் தீர்த்தது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 21 சென்டி மீட்டர் மழையும், திருவாரூரில் 18 சென்டிமீட்டர் மழையும் அதிகபட்சமாக பதிவாகியிருந்தது. மழை காலை முதல் விட்டிருந்தாலும், பெய்த மழையின் பாதிப்புகள் ஏராளமாக உள்ளன. ஏற்கனவே ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் 30 முதல் 40 நாட்கள் வயதுடைய சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் மழை நீரில் இரண்டு நாட்களாக மூழ்கிக் கிடக்கின்றன. அதேபோல மாவட்டம் முழுவதும் 254 வீடுகள் பகுதி சேதமும், முழு சேதமும் அடைந்துள்ளன. அதேபோல மன்னார்குடியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 94 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக மன்னார்குடி அருகே மூவாநல்லூர் கிராமத்தில் உள்ள அரசு திறந்தவெளி நெல் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளில் சுமார் 50 ஆயிரம் மூட்டைகள் மழை நீரில் நனைந்து முளைக்கத் தொடங்கிவிட்டன. இதனால் அரசுக்கு பெரிய நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர். தார்ப்பாய்களைக் கொண்டு நெல் முட்டைகளை மூடி வைத்ததன் காரணமாகவே நெல் மூட்டைகள் நனைந்திருப்பதாகவும் அதேபோல பல இடங்களில் இதே போல் திறந்தவெளிக் கிடங்குகளில் நெல்மூட்டைகள் வைப்பதால் அரசுக்கு பெரிய பொருளாதார இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மன்னார்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக கொள்முதல் செய்து இந்த திறந்தவெளி கிடங்கில் தான் கொண்டுவந்து சேமித்து வைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மன்னார்குடி அருகே உள்ள எம்பேத்தி கிராமத்தில் ஐந்தாம் நம்பர் வாய்க்கால் கரை உடைந்ததால் வாய்க்காலில் சென்று கொண்டிருந்த மழை நீர் முழுவதும் எம்பேத்தி, செருமங்கலம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா நெல் பயிர் வயல்களில் புகுந்தது. இதனால் நெல் பயிர் அனைத்தும் மழை நீரில் மூழ்கிவிட்டன. ஆறுகளிலும் வாய்க்கால்களிலும் தொடர்ந்து மழைநீர் முழு கொள்ளளவை எட்டி செல்வதால் வாய்க்கால்களில் மழை நீர் வடிய முடியாத அளவிற்கு எதிர்த்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக முழுவதுமாக சம்பா சாகுபடி அழியும் நிலை ஏற்படுமென விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். உடனடியாக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இழப்பீடு பெற்றுத் தரவேண்டும் என திருவாரூர் மாவட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.