மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை அபாயம் காரணமாக சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 


கடந்த 11-ந் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாற்றில் இல்லாத அளவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதன்காரணமாக, அப்பகுதியில் உள்ள விளைநிலங்கள் எல்லாம் நீரில் மூழ்கியது. வீடுகள், சாலைகள் கடும் சேதம் அடைந்தது. குறிப்பாக, சீர்காழி மற்றும் தரங்கம்பாடி பகுதி மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், அப்பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 1000 நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.


புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:


வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 4 தினங்களுக்கு மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மேலும் அது 18 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்  என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவான பிறகு மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து 18 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக 20 ஆம் தேதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.


மழை வாய்ப்பு :


மேலும் கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,  இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 


18.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.