சர்வதேச குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமைக்கு எதிரான கையெழுத்து பிரச்சாரத்தை தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா காந்தபுனேனி தொடங்கி வைத்தார். மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகள் சர்வதேச குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தினம் எனற வாசகம் பொறிக்கப்பட்ட கைப்பட்டையை மாவட்ட காவல் கண்காணிப்பளருக்கு அணிவித்தனர். மேலும், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமையை தடுப்போம், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தியிருந்தனர்.




குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம், போன்ற குழந்தைகளுக்கு எதிரான  பிரச்சனைகளை களைய மற்றும் குழந்தைகளுக்கு கவனிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படின் 1098 என்ற 24 மணிநேர இலவச, அவசர தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு எஸ்.பி. ரவளி ப்ரியா பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். பெரியார் மணியம்மை பல்கலைக் கழக சைல்டு லைன் மையமும், ஷெட் இந்தியா என்ற சமூக சேவை நிறுவனமும் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் மணிவேல், சப்-இன்ஸ்பெக்டர் கோகுல் கண்ணன், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக சைல்டு லைன் மைய இயக்குநர் முனைவர் ஆனந்த் ஜெரால்டு செபாஸ்டின், மாநகர ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஞானராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில், பெற்றோர்கள், குழந்தைகளை நம்ப வேண்டும். குழந்தைகள் ஏதாவது கூறினால், அவர் சொல்வது உண்மையா, பொய்யா என விசாரித்து, உண்மையாக இருக்கும் பட்சத்தில், உடனடியாக அதற்கான தீர்வு நோக்கிச் செல்ல வேண்டும். ஒரு நொடி தாமதமும் கூடாது. குழந்தைகளின் செயல்பாடுகளைக் கவனியுங்கள். என்ன விளையாடுகிறார்கள். யாரோடு விளையாடுகிறார்கள் என கவனியுங்கள். சந்தேகம் ஏற்படும்படி ஏதேனும் இருந்தால் அவற்றை அகற்றுங்கள். முன் எச்சரிக்கை: குழந்தைகளுக்கான பாதிப்புகள், அது நடந்து முடிந்ததும்தான் தெரியவருகின்றன. அதனால், அவர்களின் பேச்சில், முகபாவத்தில் ஏற்படும் சின்னச் சின்ன மாற்றங்களைத் தெரிந்துகொள்ள தவறாதீர்கள். தங்கள் உடலைச் சுத்தமாக வைத்திருக்கவும் தெரியவில்லை. அதனால், கலாசாரப் புனிதம் எனக் குழப்பிக்கொள்ளாமல் மனம் திறந்து உரையாடுங்கள்.




பெண் குழந்தைகள் போலவே ஆண் குழந்தைகள் மீது கவனம் அவசியம். அவர்கள் பெண்களிடம் நடந்துகொள்ளும் விதத்தில் ஆரோக்கியமான பாதையை காட்ட வேண்டிய பருவம் இது. ஆண் குழந்தைகளும் பாலியல் கொடுமைக்கு உள்ளாகின்றனர். அவற்றில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள பழக்க வேண்டும். குடும்பத்தின் அனைவரும், குழுவாக அமர்ந்து பேசுங்கள், விளையாடுங்கள், சாப்பிடுங்கள். அதுவே பல விஷயங்களை குழந்தைகளுக்குக் கற்றுத்தரும். குழந்தைகளின் தவறான கோரிக்கைகளுக்கு நோ சொல்லத் தயக்கம் காட்டாதீர்கள் என்று கருத்துக்களை வழங்கினார்.